×

உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஜாமீனுக்கு போலி ஆவணம் தந்த திருச்சி வாலிபர் கைது

*2 பெண்கள் தப்பி ஓட்டம்

உத்தமபாளையம் : உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஜாமீன் பெறுவதற்காக போலி ஆவணங்களை தந்த வாலிபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் ஜாமீன் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது சின்னமனூர் காவல் நிலையத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த பண மோசடி வழக்கு தொடர்பாக, ஏற்கனவே ஐகோர்ட் மதுரை கிளையில் முன்ஜாமீன் பெற்ற, திருச்சி மாவட்டம், காட்டூர் அம்மன் நகரைச் சேர்ந்த நந்தகுமார் (32) சரணடைந்தார். இவர் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு மனு அளித்தார்.

அப்போது நீதித்துறை நடுவர் முன்பு, தலைமை எழுத்தர் மணிமாலாவிடம், ஜாமீன் பெறுவதற்கான ஆவணங்களை வக்கீல் மூலமாக கொடுத்தார். இதில் இவருக்கு ஜாமீன்தாரராக வந்த திருச்சியை சேர்ந்த செல்வி, சுசிலா ஆகியோருக்காக, திருச்சி விஏஓ மற்றும் தாசில்தாரிடம் இருந்து பெற்ற ஆவணங்கள் போலியாக இருந்தது.

சந்தேகமடைந்த கோர்ட் ஊழியர்கள், ஆவணங்களை திருச்சி கிழக்கு தாசில்தாருக்கு அனுப்பி விசாரித்தபோது, ஆவணம் போலியானது என உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஜாமீனுக்காக வந்த 2 பெண்களும் தப்பி ஓடினர். உத்தமபாளையம் காவல் நிலையத்தில், தலைமை எழுத்தர் மணிமாலா அளித்த புகாரில், போலீசார் நந்தகுமாரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

The post உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஜாமீனுக்கு போலி ஆவணம் தந்த திருச்சி வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Uttamapalayam court ,Uttampalayam ,Uttampalayam court ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி...