பழநி, ஜூலை 21: தேர்வாணையங்கள் தேர்வு அறிவிப்பின் போதே தேதியையும் அறிவிக்க வேண்டுமென தேர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் ஆகிய அமைப்புகள் மூலம் அவ்வப்போது அறிவிப்பு வெளியிட்டு நிரப்பப்பட்டு வருகிறது. தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடும்போதே இவ்வமைப்புகள் தேர்வு தேதியை வெளியிடுவதில்லை. இதில் விதிவிலக்காக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் போல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மட்டுமே அறிவிக்கையின்போது, தேர்வு தேதியை வெளியிடுகிறது.
இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குநர் ராமமுர்த்தி கூறியதாவது: பல அமைப்புகள் தேர்வு தேதிகளை வெளியிடாததால், தேர்வுக்கு தயாராகும் லட்சக்கணக்கான மாணவ- மாணவிகள் விரக்தி அடைகின்றனர். பணியிடங்கள் குறைவாக உள்ள நிலையில் இரவு, பகல் பாராமல் தயாராகும் போட்டியாளர்கள் மிகுந்த கவலை கொள்கின்றனர். அவர்களது தேர்வின் வெற்றியும் பாதிக்கப்படுகின்றது. எனவே, வருங்காலங்களில் தேர்வாணையங்கள் தேர்வு அறிவிக்கையின்போதே தேர்வு தேதியையும் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
The post தேர்வாணையங்கள் தேர்வு அறிவிப்பின் போதே தேதியும் அறிவிக்க வேண்டும்: தேர்வாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.