×

கடை வாடகை இரு மடங்கு உயர்வு தாராசுரம் தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

 

கும்பகோணம், ஜூலை 21: கும்பகோணம் அருகே தாராசுரம் நேரு அண்ணா காய்கறி மார்க்கெட்டில் கடை வாடகை கடந்த ஆண்டை விட மடங்கு கூடுதலாக வழங்க நிர்பந்திப்பதால், கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாக சில்லரை வியாபாரிகள் வேதனை தெரிவித்து கும்பகோணம் மாநகராட்சி அலுவலக வாயில் முன், தொழிற்சங்க கொடியேந்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் மாநகராட்சிக்கு சொந்தமான தாராசுரம் நேரு அண்ணா காய்கறி மார்க்கெட் 2023-24ம் ஆண்டிற்கு ரூ.6.06 கோடிக்கு வியாபாரிகளை கலந்தாலோசிக்காமல் அதிக டெண்டர் எடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2019-22 ஆண்டு நிதியாண்டுகளை விட சுமார் ரூ.2 கோடி கூடுதலாகும். இந்நிலையில் தற்போது 383 தரைக்கடை வியாபாரிகளிடமும் ஆண்டு வாடகையாக தலா ரூ.80 ஆயிரம் உடனே செலுத்த வேண்டும் என்று ஒப்பந்ததாரர்கள் நிர்பந்திக்கின்றனர் என தரைக்கடை வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

எனவே 2023-24ம் ஆண்டிற்கான டெண்டரை மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்து விட்டு, நடப்பாண்டு வாடகையை மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக வசூலித்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்துவிட வேண்டும், தூய்மை பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யக்கூடாது என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்திடம் தங்களது கோரிக்கை குறித்த மனுவினையும், வியாபாரிகள், சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற் சங்கத்தினர் இணைந்து அளித்தனர்.

The post கடை வாடகை இரு மடங்கு உயர்வு தாராசுரம் தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Nehru Anna ,Tarasuram ,
× RELATED கும்பகோணம் பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி