×

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் பழ வியாபாரி கொலை: மர்ம நபருக்கு வலை

சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டிற்கும், மறுமார்க்கமாக செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கும் தினமும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் ராஜேஸ்வரி (35) என்ற பெண் பழ வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு 7 மணியளவில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு சென்ற மின்சார ரயிலில் வந்து, சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கினார். அப்போது அதே ரயிலில் வந்த மர்மநபர் ஒருவர், மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜேஸ்வரியை சரமாரியாக வெட்டினார்.

இதை பார்த்து பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ரயில் புறப்படும் வரை ராஜேஸ்வரியை வெட்டிய அந்த மர்மநபர் அதே ரயில் புறப்பட்டதும் அதில் ஏறி தப்பிவிட்டார். இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேஸ்வரியை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரவு முழுவதும் ராஜேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. வெட்டு காயங்கள் அதிகமாக இருந்ததால் ரத்தப் போக்கும் அதிகமாக இருந்துள்ளது. இதனால் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் பழ வியாபாரி கொலை: மர்ம நபருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Saidappet ,Chennai ,Chennai beach ,Tambaram ,Chengalpattu ,
× RELATED சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையிலான ரயில் சேவை நாளை பகுதியாக ரத்து