![]()
அண்ணாநகர்: முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் (47, பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் நேற்று ஜே.ஜே.நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், பள்ளிக்கு சென்ற எனது 2 மகள்களை காணவில்லை. அவர்களை கண்டுபிடித்து தர வேண்டும், என்று கூறியிருந்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சூரியலிங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதில், உதவி ஆய்வாளர் தேவசேனா மற்றும் தலைமை காவலர் ராயப்பன் ஆகியோர் சிறுமிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சிறுமியின் தாயாரின் செல்போனை போலீசார் சோதனை செய்தனர். அதில், மூத்த மகள் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு வாலிபரிடம் கேரளாவுக்கு விமானம் மூலம் செல்வதற்கு மீனம்பாக்கம் விமான நிலையம் செல்வதாக கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து, தனிப்படை போலீசார் மீனம்பாக்கம் விமான நிலையம் விரைந்து சென்று, அங்கு இருந்த 2 சிறுமிகளை பத்திரமாக மீட்டனர். பின்னர், சிறுமிகள் வைத்திருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்து, அந்த வாலிபரை பிடிப்பதற்கு இன்ஸ்டராகிராம் மூலம் மெசேஜ் அனுப்பினர். ஆனால், உஷாரான அந்த வாலிபர் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர், அந்த சிறுமிகளுக்கு போலீசார் அறிவுரை கூறி பத்திரமாக பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய அந்த வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
The post சென்னையிலிருந்து விமானம் மூலம் காதலனுடன் கேரளா செல்ல முயன்ற சிறுமி, தங்கையுடன் மீட்பு: இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம் appeared first on Dinakaran.
