×

பொன்னியின் செல்வன் படத்தில் செந்தமிழில் பேசி நடிக்க கலைஞரின் எழுத்துக்கள் உதவியாக இருந்தது: நடிகர் ஜெயம்ரவி பேச்சு

பெரம்பூர்: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் திமுக சார்பில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மாவட்ட இளைஞரணியின் முன்னாள் அமைப்பாளர் மகேஷ்குமார் தலைமையில், கொளத்தூர் ஜி.கே.எம் காலனி மைதானத்தில் கலையின் சாதனை கலைஞர், காலம் வியக்கின்ற தலைவர் என்னும் தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.
இதில் நடிகர்கள் ஜெயம் ரவி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத் தலைவர் ரங்கநாதன், கொளத்தூர் பகுதிச் செயலாளர்கள், நாகராஜன், ஐ.சி.எப்.முரளி, சென்னை மாநகராட்சி 6வது மண்டலக்குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் நடிகர் ஜெயம் ரவி பேசும்போது, ‘‘கலைஞரின் எழுத்துகள், வசனங்களைப் படித்துதான் நான் பொன்னின் செல்வன் படத்தில் செந்தமிழில் பேசி நடித்தேன். ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்றால், கலைஞரை பொறுத்தவரை ஒரு சோறு என்பது பராசக்தி தான். பராசக்தி படத்தில் அரசியல், சமூகம், சமூக அரசியல் என அனைத்தும் இருந்தது. பராசக்தி படம் குறித்தே இந்த நிகழ்ச்சி முழுவதும் பேசலாம். போகும் போது யாரும் எதையும் எடுத்துச் செல்ல முடியாது . ஆனால் கலைஞர் போகும்போது பேனாவை உடன் எடுத்துச் சென்றுள்ளார். வானில் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கிறார். கலைஞரின் வளர்ப்பு எப்படி உள்ளது என்று முதலமைச்சரை பார்த்தால் தெரியும். கொரோனா காலகட்டத்தில் உதயநிதி பலருக்கும் உதவியாக இருந்தார். அது பாராட்டப்பட வேண்டிய ஒன்று,’’ என்றார்.

The post பொன்னியின் செல்வன் படத்தில் செந்தமிழில் பேசி நடிக்க கலைஞரின் எழுத்துக்கள் உதவியாக இருந்தது: நடிகர் ஜெயம்ரவி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Senthamil ,Jayamravi ,Perambur ,DMK ,Tamil Nadu ,
× RELATED வெடித்து சிதறிய மின்பெட்டி