×

கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் கையெழுத்து

சென்னை: கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் கையெழுத்தானது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 2022-23 மானியக் கோரிக்கையின் போது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 10வது மண்டலம் (கோடம்பாக்கம்) மற்றும் 13வது மண்டலம் (அடையாறு) ஆகிய பகுதிகளில் தற்போதுள்ள குடிநீர் விநியோக அமைப்பை மேம்படுத்தி 24 மணி நேர குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக ரூ.1958.25 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்’ என அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலங்களில் அனைத்து குடிநீர் பகிர்மான வலையமைப்பை வடிவமைத்து மற்றும் செயல்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்காக திட்ட மேலாண்மை ஆலோசகராக ஒடிசா மாநில நீர்க் கழகத்திற்கு, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தால் 2023 ஜூன் 9ம் தேதி பணி ஆணை வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த திட்டத்திற்கு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் மற்றும் ஒடிசா மாநில நீர்க் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி, தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில், அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இப்பணிகளை மேற்கொள்வதற்காக விரிவான திட்ட அறிக்கை மற்றும் ஒப்பந்தப் புள்ளிகள் தயாரித்து வழங்கிடும் பணிகளை ஒடிசா மாநில நீர்க் கழகத்தினர் மேற்கொள்வார்கள். இத்திட்டத்தின் கீழ் பழுதடைந்துள்ள பழைய குடிநீர் குழாய்களை மாற்றியமைத்து, விடுபட்ட தெருக்களில் புதிதாக குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளின் கொள்ளளவு அதிகரிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு எண்.127 முதல் 142க்குட்பட்ட கோடம்பாக்கம், வடபழனி, மேற்கு மாம்பலம், தி.நகர், சி.ஐ.டி நகர், சைதாப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை, அசோக் நகர், கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர், நெசப்பாக்கம் (பகுதி), சாலிகிராமம், விருகம்பாக்கம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களும், அடையாறு மண்டலம், வார்டு எண்.168 முதல் 180க்குட்பட்ட ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், இந்திரா நகர், கிண்டி, அடையாறு, பெசன்ட் நகர், வேளச்சேரி, தரமணி மற்றும் திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களும் பயன் பெறுவார்கள். நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார், ஒடிசா மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை தலைவர் மதிவதனன், ஒடிசா மாநில நீர்க் கழக முதன்மை செயலாளர் பிரதீப்தா குமார் ஸ்வைன், ஒடிசா மாநில நீர்க் கழக மேலாண்மை இயக்குநர் ராமசாமி மற்றும் சென்னை குடிநீர் வாரிய உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் கையெழுத்து appeared first on Dinakaran.

Tags : Kodambakkam ,Adyar ,Minister KN Nehru ,Chennai ,Minister KN Nehru.… ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்