
பொன்னேரி: மீஞ்சூரில் பகுதியில் மின்தடையை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நேற்றுமுன்தினம் மாலை சுமார் 7 மணி அளவில் மின்சாரம் தடை ஏற்பட்டது. அதன் பிறகு, இரண்டு முறை ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை மின்சாரம் வந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, முழுவதும் மின்தடை ஏற்பட்டது. எனவே, இதனால் மக்கள் பெரிதும் அவதிகுள்ளாயினர். இதுகுறித்து புகார் அளிப்பதற்காக மின் வாரிய அலுவலகத்திற்கு அப்பகுதி மக்கள் சென்றனர். அப்போது, அங்கு ஒருவரும் பணியில் இல்லை.
இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், மீஞ்சூரின் பிரதான சாலைக்கு சென்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுதும், மின்சார வாரியத்தை சேர்ந்த ஒருவரும் சமரசம் பேச வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், பிரதான சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காலிராஜ் சம்பவ இடத்திற்கு வந்தார். பின்னர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரசத்தில் ஈடுபட்டார். மின்வாரிய உயர்அதிகாரிகளிடம் இது சம்பந்தமாக பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார். இதனை அடுத்து, அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.
மேலும், அதிகாலை சுமார் 2 மணி அளவில் பழுது சரிசெய்யப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டது. அப்பகுதி மக்கள் கூறுகையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மீஞ்சூர் பகுதி முழுவதும் பராமரிப்பு காரணமாக ஒரு நாள் முழுவதும் மின்தடை ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும், இரண்டு தினங்கள் கூட ஆகாத நிலையில் நேற்றுமுன்தினம் மாலை மீண்டும் சுமார் 7 மணி அளவில் மின்தடை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்தோம். மீஞ்சூர், மேலூர், புதுப்பேடு உள்ளிட்ட சுற்றுவட்டார் பகுதியில் மின்சாரம் இல்லாததால் பெரிதும் அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகியதாகவும். கடந்த சில மாதங்களாக மீஞ்சூர் பகுதியில் இது போன்று அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் கூறினர்.
The post மீஞ்சூர் பகுதியில் மின்தடையை கண்டித்து சாலை மறியல் appeared first on Dinakaran.