×

பாம்பு கடித்து பலியான தொழிலாளி சடலத்துடன் மலைவாழ்மக்கள் சாலை மறியல் தார்சாலை, மருத்துவ வசதி கோரி போராட்டம் அணைக்கட்டு அருகே அல்லேரி மலையில் வீட்டில் தூங்கியபோது

அணைக்கட்டு, ஜூலை 21: அணைக்கட்டு அருகே அல்லேரி மலையில் வீட்டில் தூங்கியபோது பாம்பு கடித்து பலியான தொழிலாளி சடலத்துடன் மலைவாழ் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ளது அல்லேரி மலைப்பகுதி. இந்த மலையில் 10க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. அதில் நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மலையில் வசிக்கும் மக்களின் பல ஆண்டுகால கோரிக்கை அடிவாரத்தில் இருந்து அல்லேரி மலைக்கு வருவதற்கு தார் சாலை வசதி செய்து தர வேண்டும் என்பது ஒன்று மட்டுமே. சாலை அமைப்பதற்கு தேவைப்படும் இடங்கள் அளவீடு செய்வது உள்ளிட்ட பணிகள் முடிவு பெற்றுள்ளது.

அல்லேரி அடுத்த ஆட்டுக்கொந்தரை மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர்(38), கூலி தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அனைவரும் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்குள் படுத்து தூங்கி உள்ளனர். நள்ளிரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சங்கரின் கையில் பாம்பு கடித்துவிட்டு செல்ல முயன்றது. அவரது அலறல் சத்தம் கேட்டு எழுந்த குடும்பத்தினர் பாம்பை அடித்ததில் பாம்பு அங்கேயே உயிரிழந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் சங்கரை டோலிக்கட்டி தூக்கிக்கொண்டு அங்கிருந்து இரண்டரை கி.மீ. தூரம் அல்லேரிக்கு எடுத்து வந்து அல்லேரியில் இருந்து கரடு முரடான மண் பாதையில் சிரமத்துடன் அடிவாரத்திற்கு சிகிச்சைக்கு தூக்கி வந்தனர்.

ஆனால் பாதி வழியிலேயே சங்கர் இறந்து விட்டதால் அவர்கள் சடலத்தை அப்படியே மேலே மலைக்கு தூக்கிச் சென்று விட்டனர். இதில் கடந்த மாதம் பாம்பு கடித்ததால் உரிய நேரத்தில் சிகிச்சை பெற வழியில்லாமல் குழந்தை உயிரிழந்தது. தொடர்ந்து தற்போது தொழிலாளி உயிரிழந்துள்ளார். இதேபோல் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிப்பதால் உடனடியாக தார் சாலை வசதி செய்து தரக் கோரி இறந்த சங்கரின் சடலத்துடன் கிராம மக்கள் மலை கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பீஞ்சமந்தை கூட்டுறவு சங்க தலைவரும் அந்த ஊராட்சி துணைத்தலைவருமான சுந்தரேசன் மற்றும் அணைக்கட்டு போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இதேபோல் சாலை வசதி இல்லாமல் பாம்பு கடி உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் நாங்கள் மிகவும் அச்சத்துடன் வசித்து வருகிறோம். எனவே உடனடியாக அல்லேரி மலைக்கு சாலை வசதி செய்து தர வேண்டும். மேலும் பிரசவ காலத்தில் கர்ப்பிணிகள் சிரமப்படுகின்றனர், பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை எடுப்பது கடினமாக உள்ளது. எனவே அல்லேரி மலையிலே 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ஒரு துணை சுகாதார நிலையம் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சடலத்தை அவர்கள் ஒப்படைத்தனர். பின்னர் மலையில் இருந்து தற்காலிக ஆம்புலன்ஸில் தொழிலாளி சங்கரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post பாம்பு கடித்து பலியான தொழிலாளி சடலத்துடன் மலைவாழ்மக்கள் சாலை மறியல் தார்சாலை, மருத்துவ வசதி கோரி போராட்டம் அணைக்கட்டு அருகே அல்லேரி மலையில் வீட்டில் தூங்கியபோது appeared first on Dinakaran.

Tags : Alleri Hill ,Amangkatu ,Hill ,Dinakaran ,
× RELATED கல்வராயன் மலையை சுற்றுலா தலமாக...