×

மாமூல் கேட்டு தொழிலதிபர்களுக்கு மிரட்டல் 2 ரவுடிகள் உட்பட 7 பேர் கைது

திருவள்ளூர்: வெள்ளவேடு பகுதியில் மாமூல் கேட்டு தொழிலதிபர்களுக்கு மிரட்டல் விடுத்த 2 ரவுடிகள் உட்பட 7 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 பைக், ஒரு கார் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செங்கல் சேம்பர் உரிமையாளர்கள், கட்டுமான தொழிலில் ஈடுபடும் பில்டர்ஸ் ஆகியோரிடம் ரவுடிகள் மாமூல் கேட்டு மிரட்டுவதாக பூந்தமல்லி சரக காவல் உதவி ஆணையர் ஜவகருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதனையடுத்து மேற்கொண்ட தீவிர விசாரணையில் பூந்தமல்லி அடுத்த மேல்மனம்பேடு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மனோகரன் என்பவரின் மகன் ராஜேஷ்(32), சுகுமார் என்பவரின் மகன் விஷ்வா(23) மற்றும் இவர்களது கூட்டாளிகளுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. ராஜேஷ் மீது 4 கொலை வழக்கு, 1 கொலை முயற்சி வழக்கு, ஆள் கடத்தல், கூட்டுக் கொள்ளை, பணம் கேட்டு மிரட்டல் என 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோல் விஷ்வா மீதும் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனையடுத்து ராஜேஷ் மற்றும் விஷ்வாவை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், ராஜேஷ், விஷ்வா மற்றும் கூட்டாளிகள் 5 பேர் செவ்வாப்பேட்டையை அடுத்த அயத்தூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

அதன்படி உதவி ஆணையர் ஜவகர் தலைமையிலான தனிப்படை போலீசார் ராஜேஷ் மற்றும் விஷ்வாவை நேற்று கைது செய்தனர். இருவரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதேபோல் மேல்மனம்பேடு பகுதியைச் சேர்ந்த கணேசன், நவீன், சசிதரன், வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக், காவல்சேரி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோரையும் செவ்வாப்பேட்டை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து 2 பைக், ஒரு கார் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. தொழிலதிபர்களிடம் அதிகளவில் பணம் கேட்டு மிரட்டியதாக ஒரே நேரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மாமூல் கேட்டு தொழிலதிபர்களுக்கு மிரட்டல் 2 ரவுடிகள் உட்பட 7 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Vellavedu ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் தொகுதி எம்.பி.யாக...