×

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் பேருந்து நிழற்குடை: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே ரூ.30 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் புதியதாக அமைக்கப்பட்ட பயணிகள் பேருந்து நிழற்குடையை பயன்பாட்டிற்காக திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் பிறந்து வைத்தார். திருவள்ளூர் கலெக்டர் பெருந்திட்ட அலுவலக வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மேலும் இந்தக் கல்லூரி முன்பாக மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகம், புள்ளியல் துறை அலுவலகம், மாவட்ட விளையாட்டு அலுவலகம், மைதானம், வேலைவாய்ப்பு அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த அலுவலகங்களுக்கு சென்று வருவோர் பயன்பெறும் வகையில் பயணிகள் பேருந்து நிழற்குடை அமைக்க அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரனிடம் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக் கொண்ட அவர், திருவள்ளூர் – திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவ கல்லூரி அருகே பயணிகள் பேருந்து நிழற்குடை அமைக்க தனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

இந்நிலையில் புதிய பயணிகள் பேருந்து நிழற்குடை அமைக்க டெண்டர் விடப்பட்டு புதிய பயணிகள் பேருந்து நிழற்குடையில் 8 கண்காணிப்பு கேமராக்கள், வை – பை பொருத்தப்பட்டு நவீன வசதிகளுடன் கட்டுமான பணிகள் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து புதிய பயணிகள் பேருந்து நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், துணைத்தலைவர் ரவிச்சந்திரன், நகராட்சி பொறியாளர் நாகராஜன் சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், பணி மேற்பார்வையாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா அனைவரையும் வரவேற்றார்.

இந்த விழாவிற்கு வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி வைத்து புதிய பயணிகள் பேருந்து நிழற்குடையை திறந்து வைத்தார். பிறகு சாலை ஓரங்களில் நிழல் தரக்கூடிய மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் வட்டாட்சியர் மதியழகன், மாவட்ட அவை தலைவர் திராவிட பக்தன், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆதிசேஷன், ஒன்றிய செயலாளர்கள் கூளூர் ராஜேந்திரன், மகாலிங்கம், அரிகிருஷ்ணன், ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் சிட்டிபாபு மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், திமுக நகர நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிழற்குடையை திறந்து வைத்ததன் மூலம் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள், மருத்துவர்கள், பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பயன்பெற்றனர்.

The post திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் பேருந்து நிழற்குடை: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : VG Rajendran MLA ,Tiruvallur Government Medical College ,Tiruvallur ,Nizhalkudai ,Tiruvallur Government ,Medical ,College ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...