×

சென்னையில் உள்ள ரூ.100 கோடி சொத்து ராதாபுரத்தில் பதிவு பாஜ எம்எல்ஏ மகன் போலி பத்திரப்பதிவு ரத்து: பதிவுத்துறை அதிரடி நடவடிக்கை

நெல்லை: பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி பெயரில் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை போலியாக பத்திரப்பதிவு செய்ததை பத்திரப்பதிவுத் துறை அதிரடியாக ரத்து செய்துள்ளது. மதுரையைச் சேர்ந்த இளையராஜா என்பவர், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிலத்தை மோசடி செய்து, பின் நெல்லை தொகுதி பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் மகன்  நயினார் பாலாஜியுடன் இணைந்து மிகப்பெரிய பத்திரப்பதிவு மோசடி ஒன்றை செய்ததாக அறப்போர் இயக்கம் கடந்த ஏப்ரல் மாதம் குற்றம் சாட்டியது. அதாவது, விருகம்பாக்கத்தில் உள்ள சர்ச்சைக்குரிய 1.3 ஏக்கர் நிலத்தின் பட்டா 2006ல் சரஸ்வதி என்பவருடைய பெயரில் உள்ளது.

அவர் விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சுந்தரமகாலிங்கம், வசந்தா ஆகியோருக்கு விற்றுள்ளார். பின்னர் அவர்களின் பெயரில் இந்த நிலத்திற்கான பட்டா மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் பின்னர் 2008ல் கௌரி அம்மாள் மற்றும் சிலர் இதே நிலத்தில் பாகப்பிரிவினை பத்திரத்தை பதிவு செய்கின்றனர். இதை எதிர்த்து சுந்தரமகாலிங்கம், வசந்தா சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தற்போது வரை இந்த வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. இந்த 1.3 ஏக்கர் நிலத்தை மோசடியாக சம்பந்தமே இல்லாத நெல்லை மாவட்டம், ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மதுரையைச் சேர்ந்த இளையராஜாவும், பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் மகன்  நயினார் பாலாஜியும் இணைந்து ஒரு மோசடி ஒப்பந்தத்தை கடந்த 2022 ஜூலை 23ல் பதிவு செய்தனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உதயத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு சில சொத்துக்களையும், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சொத்துக்களையும் சேர்த்து போலியான முறையில் பத்திரப்பதிவை அப்போது ராதாபுரம் சார்பதிவாளராக இருந்த சரவணமாரியப்பன் செய்ததாக அறப்போர் இயக்கத்தால் குற்றம் சாட்டப்பட்டது. அப்போது சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் இந்த நிலத்தை கையகப்படுத்த உள்ளது என்பதையும் கணக்கில் அவர் கொள்ளவில்லை. மேலும் இந்த ஒப்பந்தத்தில் நயினார் பாலாஜி ரூ.46 கோடிக்கு இந்த நிலத்தை வாங்க சம்மதம் என்று முன்பணமாக ரூ.2.5 கோடி கொடுத்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிலத்தை மோசடி பதிவு செய்த இளையராஜா, நான் தான் இந்த நிலத்திற்கு பொது அதிகாரம் பெற்ற ஏஜன்ட் என்றும், இந்த நிலம் குலாப்தாஸ் நாராயண் தாஸ் என்பவரின் பேரன் ஜெயந்திர ஓராவுக்கு சொந்தமானது என்றும் கூறி, இந்த 1.3 ஏக்கர் நிலத்தை திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுடைய மகன் நயினார் பாலாஜியுடன் இணைந்து மோசடியாக ஒப்பந்த பத்திரப்பதிவு செய்துள்ளதாக கூறி அறப்போர் இயக்கம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இதுகுறித்து பதிவுத் துறை விசாரணை நடத்தியது. அப்போது நயினார் பாலாஜி, இளையராஜா ஆகியோர் மோசடியாக பத்திரப்பதிவு செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்த பதிவுத்துறை பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் சரவண மாரியப்பனை சில மாதங்களுக்கு முன்பு தற்காலிக பணிநீக்கம் செய்தது. இதன் தொடர் நடவடிக்கையாக தற்போது ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதாவது சொத்து இருக்கும் சரகத்தில் அமைந்துள்ள தென் சென்னை மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) சத்யபிரியா இந்த ஆவண பதிவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். ராதாபுரத்தில் பத்திரப்பதிவு செய்த போதிலும், அந்த சொத்து இருக்கும் இடம் தென் சென்னை சரகம் என்பதால் அந்த மாவட்ட பதிவாளரால் ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரன் தற்போது நெல்லை தொகுதி பாஜ எம்எல்ஏவாக உள்ளார். மேலும் பாஜ மாநில துணைத் தலைவராகவும், சட்டமன்ற கட்சித் தலைவராகவும் பதவி வகிக்கிறார். அவரது மகன் நயினார் பாலாஜி பாஜவின் மாநில இளைஞரணி துணைச் செயலாளராக உள்ளார்

* மோசடி பதிவு
நெல்லை மண்டல துணை பதிவுத் துறை தலைவர் அறிக்கையின்படி, ராதாபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவண எண் 4278/2022 ரத்து செய்யப்படுவதற்கு முகாந்திரம் உள்ள ஆவணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 463, 470ன் படி மோசடி பத்திரப்பதிவு ஆகும் என தென் சென்னை மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) கூறியுள்ளார். இது இந்திய பதிவுச்சட்டம் பிரிவு 22 பி (1)ன் படி மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த ஆவணத்தை ரத்து செய்து ஆணையிடப்பட்டுள்ளது என பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

* நீதிமன்றம் மூலம் சந்திப்பேன்
நயினார் நாகேந்திரன் மகன் நயினார்பாலாஜி நெல்லையில் நேற்று அளித்த பேட்டி: இந்த நிலம் குறித்த அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளதாக விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகம் மூலம் ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு தடையில்லா சான்றும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பிளீடர் மூலமும் நிலம் குறித்த சட்ட கருத்தும் கேட்கப்பட்டு தடையில்லா சான்றும் பெறப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்தில் உள்ள அந்த நிலத்தின் மதிப்பு ரூ.46 கோடி தான். அதனை ரூ.100 கோடி என காட்டப்பட்டுள்ளது. அனைத்து ஆவணங்களும் முறையாக தாக்கல் செய்துதான் கிரைய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் முறைகேடுகள் ஏதும் இல்லை. இதனை நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post சென்னையில் உள்ள ரூ.100 கோடி சொத்து ராதாபுரத்தில் பதிவு பாஜ எம்எல்ஏ மகன் போலி பத்திரப்பதிவு ரத்து: பதிவுத்துறை அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Baja MLA ,Radhapura ,Chennai ,Nayanar Nagendran ,Nayanar Balaji ,Dinakaran ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் மழை நீரில்...