×

வேளாண் பல்கலைக்கழகத்தில் பொது கவுன்சலிங் துவக்கம்: 7.5% இடஒதுக்கீடுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு

கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் பொது கவுன்சலிங்கில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகள், 3 பட்டயப்படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை மே முதல் ஜூன் வரை நடந்தது. சுமார் 41 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் தகுதியான 36 ஆயிரத்து 612 பேரின் தரவரிசை கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. இதில், அரசு பள்ளியில் படித்தவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 10 ஆயிரத்து 887 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு ஆன்லைன் மூலம் பொதுப்பிரிவு கலந்தாய்வு நடந்தது. இந்த கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 19ம் தேதி மதியம் பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த 56 மாணவர்களிடம் பெறப்பட்ட தகவல்களில் சந்தேகம் எழுந்தது.

குறிப்பாக, அவர்கள் அரசு பள்ளியில்தான் படித்தார்களா? என்ற சந்தேகம் வந்ததாக தெரிகிறது. இதையடுத்து, மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பின்றி ஒத்திவைக்கப்பட்டது. மேலும், அரசு ஒதுக்கீட்டில் பொதுப்பிரிவில் உள்ள 4,555 இடங்களுக்கான பொது கவுன்சலிங் ஆன்லைனில் நடந்து வருகிறது. தரவரிசை பட்டியலின் அடிப்படையில், 1:2 என்ற விகிதத்தில் மாணவர்கள் கவுன்சலிங்கில் பங்கேற்று தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்படும். பின்னர், அவர்களுக்கு கடிதம் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வேளாண் பல்கலைக்கழகத்தில் பொது கவுன்சலிங் துவக்கம்: 7.5% இடஒதுக்கீடுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : University of Agriculture ,COVI ,Gov Agricultural University ,
× RELATED வேளாண் பல்கலையில் தேனி வளர்ப்பு பயிற்சி