×

குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் 1000 பேர் அமரும் வகையில் ஏ.சி. வசதியுடன் மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் 1000 பேர் அமரக்கூடிய வகையில் ஏர்கண்டிஷன் வசதியோடுக் கூடிய மிகப்பெரிய அரங்கம் தமிழ்நாடு அரசின் பங்களிப்போடு விரைவில் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை குரோம்பேட்டை, மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி பவள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கலந்துகொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: எம்.ஐ.டி.யின் முதலாவது பட்டமளிப்பு விழா 1952ம் ஆண்டு நடந்தபோது அதில் பிரதமர் ஜவகர்லால் நேரு கலந்து கொண்டிருக்கிறார்.

இந்த கல்லூரியின் பொறியியல் மற்றும் மின்னியல் ஆய்வு கூடத்தை தொடங்கி வைத்தவர் முன்னாள் முதல்வர் காமராஜர். 1975ம் ஆண்டு நடந்த கல்லூரியின் வெள்ளி விழாவில், அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு அன்றைய தமிழ்நாடு முதல்வர் கலைஞர் முன்னிலை வகித்திருக்கிறார். இந்த வரிசையில், பவளவிழா நிகழ்ச்சியில் பங்கெடுக்கக்கூடிய வாய்ப்பை அடியேன் பெற்றிருப்பதை எண்ணி, எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன். எம்.ஐ.டி வளாகத்தில் பல்வேறு திட்டங்களுக்கும், பல மையங்கள் உருவாக்குவதற்கும் தமிழ்நாடு அரசு நிதியுதவி செய்து கொண்டு வருகிறது.

அதன்படி,
* வான்வழி ஆராய்ச்சி மையத்தை இங்கு உருவாக்க அரசு உதவி செய்தது.
* நுண்ணிய துணைக்கோளான ‘அனுசாட்’ வெற்றிகரமாக உருவாக்க உதவி செய்யப்பட்டது.
* தானியங்கி பொறியியல் என்ற சிறப்புறுமையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்தது.
* தானியங்கி பொறியியல் துறையில் 2,700 சதுர அடியில் 8 ஆய்வு கூடங்கள் அடங்கிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது.
* சீமன்ஸ் சிறப்புறுமையம் என்ற ஒன்றை தமிழ்நாடு திறன்மிகு வளர்ச்சி கழகத்திடம் இருந்து நிதி பெற்று அமைத்துள்ளது.
* ஆளில்லா வான்வழி வாகன கழகம் எம்.ஐ.டி.யில் நிறுவப்பட்டு விண்வெளி ஆராய்ச்சி மையத்தோடு இணைத்து உருவாக்கியது. அனைவருக்கும் அடிப்படை கல்வி என்பது ஒரு காலமாக இருந்தது. அனைவருக்கும் பள்ளி கல்வி கிடைப்பது காமராஜர் ஆட்சி காலம் தான் உறுதி செய்தது. அனைவருக்கும் கல்லூரி கல்வியை கலைஞரின் ஆட்சி காலம் உறுதி செய்தது. அனைவருக்கும் உயர் கல்வி, ஆராய்ச்சி கல்வி என்பதை வழங்குவதுதான் எங்களுடைய நோக்கம். அனைத்து மாணவர்களையும் பல்துறை ஆற்றல் பெற்றவர்களாக உயர்த்துவதுதான் எங்களுடைய நோக்கம். பள்ளி – கல்லூரிக்கு வந்தவர்களை மட்டுமல்ல, பள்ளிகளுக்கு வராத, கல்லூரிக்கு வராதவர்களையும் வரவழைத்து அவர்களுக்கு கல்வி வழங்கும் அறிவுமிகு ஆட்சியாக இன்றைய தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.

பொறியியல் படிக்கும் பட்டதாரிகளான நீங்கள் வேலை தேடுபவர்களாக மட்டும் இல்லாமல், வேலை தருபவர்களாக மாற வேண்டும். அதில் உங்களது தனித்தன்மை என்ன என்பதை தீர்மானித்து செயல்படுங்கள். பொறியியலில் பிரிவு பல்வேறு பிரிவு கொண்டதாக உயர்ந்து விட்டது. இது டிஜிட்டல் காலம். இணைய யுகமாக உலகம் மாறிவிட்டது. அனைத்திலும் தொழில்நுட்பம் நுழைந்துவிட்டது. மருத்துவம் முதல் ராணுவம் வரையில் தொழில்நுட்பம் தான் இன்றைக்கு வழி நடத்திக் கொண்டிருக்கிறது. ஆப் வசதியை பயன்படுத்தாதவர்கள் இன்றைக்கு இருக்க முடியாது என்று சொல்லக்கூடிய நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த தொழில்நுட்ப பயன்பாட்டை நீங்கள் எப்படி பயன்படுத்தி கொள்ளப் போகிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

உங்களது பொறியியல் அறிவை புதிய கண்டுபிடிப்புகள், புதிய நிறுவனங்களை உருவாக்குதல் ஆகியவற்றோடு இணைக்க வேண்டும். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதாக எம்.ஐ.டி. போன்ற நிறுவனங்கள் செயல்பட வேண்டும். 75 ஆண்டுகளாக, நீங்கள் ஆற்றி வரும் தொண்டை மேலும் மேலும் தொடர வேண்டும். அதனால் சில முக்கிய அறிவிப்புகளை இந்த பவளவிழாவின் மூலமாக நான் அறிவிக்க விரும்புகிறேன்.அதிநவீன உள்விளையாட்டு அரங்கத்தோடு இணைந்த கலையரங்கம் ஒன்றை கட்டுவதற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.கற்றல் வளாகம் மற்றும் பவளவிழா பூங்கா அமைக்க ரூ.25 கோடியும் வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் ஓர் அறிவிப்பை வெளியிட நான் விரும்புவது, புகழ்மிக்க இந்த எம்.ஐ.டி கல்லூரி வளாகத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில், பெரிய அரங்கம் இல்லை என்பது என்னுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அந்த குறையை போக்கக்கூடிய வகையில், 1000 பேர் அமரக்கூடிய ஏர்கண்டிஷன் வசதியோடுக்கூடிய மிகப்பெரிய அரங்கம் ஒன்று தமிழ்நாடு அரசின் பங்களிப்போடு விரைவில் அமைக்கப்படும் என்றார். பின்னர் அங்கு கல்லூரி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

* வாரிசுகள் சிறப்பாக சேவையாற்ற முடியும்
தொழில் அதிபரும், கொடையுள்ளத்தில் சிறந்தவருமாக விளங்கிய மரியாதைக்குரிய சி.ராஜம் இந்தியா ஹவுஸ் என்ற தனது சொத்தை விற்று எம்.ஐ.டி. என்ற நிறுவனத்தை 1949ம் ஆண்டு நிறுவினார். 1955ம் ஆண்டு முதல் அவரது மகன் சி.ஆர்.ராமசாமி இந்த நிறுவனத்தை வளர்த்தெடுத்தார். இதன் தொடர்ச்சியாக, இன்று அவருடைய பேத்தி டாக்டர் பிரேமா சீனிவாசன் இந்த கல்வி நிறுவனத்தை நடத்திக் கொண்டு வருகிறார். வாரிசுகளால் இந்த கல்வி நிறுவனமும் வளர்ந்துள்ளது. வாரிசுகளால் ஏராளமான தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியை பெற்றுள்ளார்கள். இந்த வாரிசுகளால் தமிழ்நாட்டின் இளைய சக்தியானது அறிவாற்றல் பெற்றுள்ளது. நான் அரசியல் பேசுவதாக யாரும் நினைத்துக்கொள்ள வேண்டாம். வாரிசுகள் நினைத்தால் ஒரு தலைமுறைக்கு மட்டுமல்ல, மூன்று நான்கு ஐந்து என்று பல தலைமுறைக்கு சேவையாற்ற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் ராஜம் குடும்பம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

The post குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் 1000 பேர் அமரும் வகையில் ஏ.சி. வசதியுடன் மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Tags : MIT A.C. ,Chief Minister ,M. K. Stalin ,CHENNAI ,MIT ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...