×

ஆட்டுக்கொட்டகை ‘செட்டப்’ அருகே புதிய கூண்டு புலியை ஏமாற்றி பிடிக்க புதிய திட்டம் தயார்: அனைத்து கால்நடைகளையும் ஒரே இடத்தில் அடைக்க ஏற்பாடு

* பொதுமக்களுக்கு வனத்துறை உத்தரவு

அருமனை: குமரி மாவட்டம் சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் அட்டகாசம் செய்யும் புலியை ஏமாற்றி பிடிக்க வசதியாக ஆட்டுக்கொட்டகை போன்ற செட்டப் அமைக்கப்பட்டு அதனருகே கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஊரில் உள்ள அனைத்து கால்நடைகளையும் ஒரே இடத்தில் அடைத்து பாதுகாக்கவும் வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். குமரி மாவட்டம் சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் கடந்த 8ம் தேதி முதல் புலி ஒன்று குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது. நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் புலி வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, நாய் என வீட்டு விலங்குகளை குறிவைத்து கொன்று வருகிறது.

இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். புலியை பிடிக்க வனத்துறையினர் 2 கூண்டுகள் அமைத்தும், பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் காத்திருக்கின்றனர். ஆனாலும் அந்த புலி இன்னும் சிக்கவில்லை. மீண்டும் புலி நடமாட்டம் அதிகரித்து வருவதால் சிற்றாறு சிலோன் காலனி மக்கள் உயிர் பயத்தில் இரவில் வீட்டின் கதவு, ஜன்னல்களை நன்றாக அடைத்துவிட்டு வீட்டின் உள்ளேயே முடங்கி கிடந்தனர். இந்தநிலையில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, ஆட்டை வேட்டையாடிய வீட்டின் அருகே ஆய்வு நடத்தினார். அங்குள்ள ஆட்டுக் கொட்டையில் புலி எவ்வாறு நுழைந்தது என்பதை பார்வையிட்டார். கூண்டு பல இடங்களில் வைத்தும் புலி சிக்காத காரணத்தால் மாற்று திட்டம் யோசிக்கப்பட்டது. அதாவது ஆட்டுக்கொட்டகையை குறிவைத்துதான் புலி வருகிறது.

எனவே ஆட்டுக் கொட்டகை போன்று அமைத்து அதன் அருகே புதிய கூண்டை வனத்துறையினர் அமைத்திருக்கிறார்கள். கூண்டின் ஒரு பகுதியில் ஆடு ஒன்றையும் கட்டிவிடுவார்கள். புலி இரவில் வந்தாலும் அனைத்து கொட்டகைகளும் காலியாக இருக்கும். இதன்மூலம் ஆட்டுக்கொட்டகை அருகே அமைக்கப்பட்ட கூண்டில் இருக்கும் ஆட்டை கண்டதும் புலி தானாகவே சிக்கிவிடும் என்ற நம்பிக்கையில் வனத்துறையினர் உள்ளனர். ஊர் மக்கள் இச்செயல்பாட்டிற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், தங்களுடைய கால்நடைகளை குறித்த நேரத்தில் கோயில் வளாகத்தில் விடுவதன் மூலமாக கால்நடைகளுக்கும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும், புலி பிடிப்பதற்கும் வசதியாக இருக்கும் என்று வன அலுவலர் முகைதீன் தெரிவித்திருக்கிறார். இதுபோக ஏற்காட்டில் இருந்து புலி பிடிக்கும் சிறப்பு குழு இன்று வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக பொதுமக்களிடம் வித்தியாசமான யோசனையை வனத்துறையினர் கூறியுள்ளனர். அதாவது சிலோன் காலணி ஊர் மக்கள் வளர்க்கக் கூடிய ஆடு, மாடு போன்ற உயிரினங்களை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் மாலை 6.30 மணி அளவில் கட்டி விடுமாறு வனத்துறையினரால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

* புலியை ஏமாற்ற முடியுமா?

காலியாக உள்ள ஆட்டுக்கொட்டகைகளை பார்த்து ஏமாந்து போன புலி, செட்டப் செய்து வைத்துள்ள கூண்டின் உள்ளே ஒரு பகுதியில் கட்டப்பட்டிருக்கும் ஆட்டை கண்டதும் அதனை வேட்டையாட வரும். அப்போது கூண்டிற்குள் புலி நுழைந்ததும் சடாரென்று கூண்டின் கதவு அடைக்கப்பட்டுவிடும். இதன் மூலம் கூண்டின் உள்ளே கட்டப்பட்டிருக்கும் ஆட்டுக்கும், புலிக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என வனத்துறையினர் கூறுகின்றனர். அதெல்லாம் இருக்கட்டும் இந்த புத்திசாலி புலி ஏமாறுமா?

The post ஆட்டுக்கொட்டகை ‘செட்டப்’ அருகே புதிய கூண்டு புலியை ஏமாற்றி பிடிக்க புதிய திட்டம் தயார்: அனைத்து கால்நடைகளையும் ஒரே இடத்தில் அடைக்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Ceylon Colony ,Kumari district ,Attukottakai ,Dinakaran ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...