×

ஈழத்தமிழர், மீனவர் நலன் சார்ந்த சிக்கல்களுக்கு தீர்வு காண இலங்கை அதிபரிடம் இந்தியப் பிரதமர் வலியுறுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: இலங்கைக்கான உதவிகள் நிபந்தனையற்றவையாக இருக்கக் கூடாது எனவும் ஈழத்தமிழர், மீனவர் நலன் சார்ந்த சிக்கல்களுக்கு தீர்வு காண இலங்கை அதிபரிடம் இந்தியப் பிரதமர் வலியுறுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது; இந்தியா, இலங்கை இடையிலான தூதரக உறவு ஏற்பட்டதன் 75-ஆம் ஆண்டையொட்டி, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க நாளை இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேசவிருக்கும் அவர், இலங்கைக்கு மேலும் பல உதவிகளை வழங்க வேண்டும்; இலங்கையில் இந்தியா முதலீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது தான் அவரது நோக்கம். பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவி செய்வதில் தவறு இல்லை. ஆனால், இந்தியாவின் உதவிகள் நிபந்தனையற்றவையாக இருக்கக் கூடாது.ஒருபுறம் இந்தியாவிடமிருந்து உதவிகளை வாங்கிக் குவிக்கும் இலங்கை, இன்னொருபுறம் வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்து குவிக்கிறது. அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து வாழ்வாதாரத்தை முடக்குகிறது.

இலங்கை அரசின் இந்தப் போக்கை அனுமதிக்க முடியாது. இன்றைய நிலையில், கடந்த 9-ஆம் நாள் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 15 பேரும், கடந்த 3 ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட 67 விசைப்படகுகளும் இலங்கையிடம் உள்ளனர். மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தியப் பிரதமர் வலியுறுத்த வேண்டும். தமிழக மீனவர்கள் அவர்களின் பாரம்பரிய பகுதிகளில் தடையின்றி மீன்பிடிக்க அனுமதிக்குமாறு இலங்கை அதிபரை வலியுறுத்த வேண்டும்.

காலம் காலமாக நீடிக்கும் ஈழத்தமிழர் சிக்கலுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வு குறித்து இலங்கை அரசு முன்வைத்துள்ள திட்டத்தை இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகள் ஏற்க மறுத்து விட்டன. தமிழர்களுக்கு தன்னாட்சியுடன் கூடிய அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும். 2009-ஆம் ஆண்டு இலங்கைப் போரில் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி இலங்கை அதிபருக்கு இந்தியா நிபந்தனை விதிக்க வேண்டும்.

இலங்கையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளை, இந்தியாவுக்கு எதிராக உளவுபார்க்கும் பணிகளுக்கு சீனா பயன்படுத்திக் கொள்வதை இலங்கை அனுமதிக்கக் கூடாது என்று இந்தியா திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும். மேற்கண்ட நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டால் மட்டும் தான் இலங்கைக்கு இந்தியா பொருளாதார உதவிகளை வழங்கும் என்பதை ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தியப் பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post ஈழத்தமிழர், மீனவர் நலன் சார்ந்த சிக்கல்களுக்கு தீர்வு காண இலங்கை அதிபரிடம் இந்தியப் பிரதமர் வலியுறுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Prime Minister of India ,President of Sri Lanka ,Eelathamilar ,Fisherman ,Annammani Ramadas ,Chennai ,Sri Lanka ,Eilathamilar ,President ,
× RELATED இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து...