×

உச்சநீதிமன்றத்தில் இன்று எடப்பாடி பழனிச்சாமி கேவியட் மனு தாக்கல்

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் இன்று டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்கள் தரப்பை கேட்காமல் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது, நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டு ரூ.4800 கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக, கடந்த 2018ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடுத்திருந்தார். மேலும், இவ்வழக்கை சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றை இவ்வழக்கு தொடர்பாக கருத்தில் கொண்டு, மீண்டும் வழக்கை விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மேற்கண்ட உத்தரவின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி மீதான முறைகேடு வழக்கை புதிதாக மீண்டும் விசாரிக்க வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி மனுத்தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எடப்பாடி பழனிச்சாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் எந்தவொரு தவறும் இல்லை என்பதால், புதிதாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி, கடந்த 2 நாட்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அம்மனுவில், டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தரப்பிலோ அல்லது வேறு யாரேனும் தரப்பிலோ மேல்முறையீடு செய்யும் பட்சத்தில், எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல், எவ்வித உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

The post உச்சநீதிமன்றத்தில் இன்று எடப்பாடி பழனிச்சாமி கேவியட் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Edabadi ,Antique Caviat ,New Delhi ,Caviet ,Edappadi Annika ,Edabadi Antique Caviet ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு