×

கவனிக்க ஆள் இல்லாததால் ஓடும் காரில் விஷம் குடித்து வக்கீல் பெற்றோர் தற்கொலை

மன்னார்குடி: மன்னார்குடி அருகே ஓடும் காரில் விஷம் குடித்து வக்கீலின் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர். தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் சோமசுந்தரம்(78). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பாமா(எ) தாயம்மாள்(75). இவர்களது மகள் ஏற்கனவே இறந்து விட்டார். மகன் மணிகண்டன்(40) மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இன்னும் திருமணம் ஆகாத இவர் மாதம் ஒருமுறை தஞ்சை வந்து தனது பெற்றோரை பார்த்து செல்வது வழக்கம். இந்நிலையில் சோமசுந்தரம் தொண்டை புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரது மனைவி பாமாவுக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. தங்களை கவனிக்க யாரும் இல்லையே என்று தம்பதி மன வேதனையில் இருந்து வந்தனர். இதனால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை பாமாவின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர் அருகே உள்ள ஈசனக்குடிக்கு இருவரும் வாடகை காரில் புறப்பட்டனர். செல்லும் வழியிலேயே இருவரும் குளிர் பானத்தில் விஷம் கலந்து குடித்தனர். பின்னர் ஈசனக்குடி சென்ற நிலையில் காரில் இருந்து இறங்கினர். அப்போது இருவரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். உடனடியாக இருவரையும் உறவினர்கள் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். அங்கு பாமாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோமசுந்தரமும் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தகவலறிந்த விக்கிரபாண்டியம் போலீசார் இருவரது சடலங்களையும் கைப்பற்றி அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கவனிக்க ஆள் இல்லாததால் ஓடும் காரில் விஷம் குடித்து வக்கீல் பெற்றோர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Mannargudi ,Thanjavur Tolkappiyar Square ,
× RELATED ‘கூப்பிடும்போது எல்லாம் வரவேண்டும்’...