×

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த சென்னை ஆசாமி கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள சொரக்காயல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு (38). வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2021ல் நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 30 இளைஞர்கள், பாபுவிடம் வெளிநாட்டு வேலை கேட்டு அணுகியுள்ளனர். பாபுவுக்கு சென்னை வடபழனியில் உள்ள பாஸ்போர்ட் மற்றும் விசா எடுத்து தரும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல்ரகீம் (58) என்பவருடன் பழக்கம் உள்ளது. அதன்பேரில் தன்னிடம் அணுகிய 30 இளைஞர்கள் குறித்து அப்துல்ரகீமிடம் கூறியுள்ளார். அதற்கு அப்துல்ரகீம், நியூசிலாந்தில் வேலை வாங்கித்தருவதாகவும், தலா ரூ.1 லட்சம் செலவாகும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பிய 30 இளைஞர்களும், பாபுவின் மூலம் ரூ.30 லட்சம் மற்றும் உரிய ஆவணங்களை அப்துல்ரகீமுக்கு அனுப்பி வைத்தனர். சில வாரங்களில் 30 பேருக்கும் பாஸ்போர்ட், விசா வந்துவிட்டதாக அப்துல்ரகீம் கூறினார். அவற்றை போட்டோ எடுத்து பாபுவின் வாட்ஸ்அப்புக்கு அனுப்பியுள்ளார். கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதால் 30 பேரிடமும் தலா ரூ.1 லட்சம் என ரூ.30 லட்சம் பெற்றுத்தரும்படி அப்துல்ரகீம் கேட்டுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த பாபு, தனக்கு வாட்ஸ்அப்பில் வந்த பாஸ்போர்ட் மற்றும் விசாவை சோதனை செய்து பார்த்ததில் அவை அனைத்தும் போலி என தெரிந்தது. இதனையறிந்த 30 இளைஞர்களும் தங்களுக்கு வெளிநாட்டு வேலை வேண்டாம், பணத்தை திரும்ப கொடுத்துவிடுங்கள் என பாபுவிடம் கேட்டுள்ளனர். அதன்பேரில் பாபு, அப்துல்ரகீமிடம் தொடர்புகொண்டு, `நீங்கள் அனுப்பிய பாஸ்போர்ட், விசா அனைத்தும் போலியானவை, எனவே பணத்தை திரும்ப கொடுத்துவிடுங்கள்’ எனகேட்டுள்ளார். ஆனால் பணம் தராமல் அப்துல்ரகீம் தட்டிக்கழித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்பத்தூர் எஸ்பி ஆல்பர்ட்ஜானிடம் பாபு புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு விசாரித்து வந்தனர். இதை அறிந்த அப்துல்ரகீம் பெங்களூருவில் பதுங்கியிருந்தார். இந்நிலையில் குற்றபிரிவு போலீசார் பெங்களூரு சென்று, அப்துல்ரகீமை கைது செய்து திருப்பத்தூருக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது இந்த மோசடியில் அப்துல்ரகீம் மட்டுமின்றி ராமநாதபுரத்தை சேர்ந்த அவரது மைத்துனர் நஹீம், நாமக்கல்லை சேர்ந்த கோபி, கோவையை சேர்ந்த ஷெரீப் ஆகியோர் உடந்தை என தெரியவந்தது. இந்நிலையில் அப்துல்ரகீமை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்றிரவு சிறையில் அடைத்தனர். தலைமறைவான நஹீம், கோபி, ஷெரீப் ஆகிய 3 பேரையும் தேடிவருகின்றனர்.

The post வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த சென்னை ஆசாமி கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tirupathur ,Babu ,Sorakayalantham village ,Natrampalli ,Tirupathur district ,
× RELATED நீட் தேர்வுக்கு தயாரான மாணவியிடம்...