×

உரிய நிவாரணம் வழங்கக் கோரி கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

கோவில்பட்டி, ஜூலை 20: கோவில்பட்டி தாலுகா வில்லிசேரி எலுமிச்சை விவசாயிகள் சங்க தலைவர் பிரேம்குமார், ராமசுப்பு, ஆதிமூலம், நவநீதன், வேணுகோபால், அய்யப்பன், பாலசுப்பிரமணியன் மற்றும் விவசாயிகள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவில்பட்டி தாலுகா இடைசெவல் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட காற்றாலைகள் அமைப்பதற்கு அனுமதி வாங்கி உள்ளனர். காற்றாலைகள் நிறுவுவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வேலைகள் நடைபெறும்போது அதிகமான அளவிற்கு நீர்நிலை ஓடைகள் மூடப்படுகிறது. சாலைகள் அமைக்க இயற்கை வளங்கள் சுரண்டப்படுகிறது.

உட்கட்டமைப்பு தேவைக்காக மின்கம்பங்கள் விவசாய நிலங்கள், நீர்வழி ஓடைகளில் நிறுவப்படுகிறது. இதற்கென காற்றாலை நிறுவனங்கள் ஒரு மின்கம்பத்திற்கு ரூ.2 லட்சம் வரை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்குகிறது. அது முறையாக விவசாயிகளுக்கோ, அரசு துறைகளுக்கோ சேர்வதில்லை. மேலும் காற்றாலைகள் அதிகமாக அமைக்கும் பட்சத்தில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவு குறைகிறது என்பது நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒன்றிய நிலத்தடி நீர்மட்ட ஆய்வு அறிக்கையில் தெரிய வருகிறது.

எனவே ஒரு மின் கம்பத்திற்கு ரூ.2 லட்சம் வீதம் வருவாய்த் துறைக்கு காற்றாலை நிறுவனங்கள் செலுத்தி, துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். காற்றாலை அமைக்கும் இடத்தில் குறைந்தபட்சம் 2 ஏக்கர் அளவிற்கு நீர்க்குட்டை அமைக்க வேண்டும். அருகில் இருக்கும் கிராமங்களில் சுமார் 2500 ஏக்கருக்கும் மேலாக எலுமிச்சை மற்றும் நீண்டகால பயிர்கள் விவசாயம் செய்து வருகிறோம். இவையனைத்தும் 4-5 ஆண்டுகளில் கடுமையாக பாதிக்கும் சூழல் உள்ளது. எனவே விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் இயற்கை வளங்கள், நீர் ஆதாரத்தை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

The post உரிய நிவாரணம் வழங்கக் கோரி கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Kovilpatti RTO ,Kovilpatti ,Premkumar ,Ramasuppu ,Adimoolam ,Navaneethan ,Venugopal ,President ,Villissery Lemon Farmers Association ,Dinakaran ,
× RELATED தேசிய சிலம்ப போட்டி கோவில்பட்டி பள்ளி மாணவன் சாதனை