×

பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகையாக ₹3.21 கோடி ஒதுக்கீடு

தர்மபுரி, ஜூலை 20: கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், பங்குதாரர்களான விவசாயிகளுக்கு ஈவுத்தொகை வழங்க, ஆலை நிர்வாகம் ₹3.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஈவுத்தொகை பெற வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கோபாலபுரத்தில், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 4,150 கரும்பு விவசாயிகள் பதிவு செய்து உறுப்பினர்களாக உள்ளனர். ஒவ்வொரு அரவை பருவத்திலும், 4.5 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை பெய்துள்ளதால், கரும்பு சாகுபடி பரப்பு வழக்கத்தை விட கூடுதலாகியுள்ளது. இதனால் சர்க்கரை ஆலைக்கு பதிவு கரும்பு, வரத்து அதிகமாக இருந்தது.

இந்த சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை லாபத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில், நடப்பாண்டிற்கான அரவை 7 மாதம் நடந்து முடிந்தது. அதாவது கடந்த நவம்பர் மாதம் தொடங்கி மே மாதத்தில் முடிந்தது. மொத்தம் 3.58 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. கரும்பு அரவை பிழிதிறன் 10.91 சதவீதமாக இருந்தது. 1000 கிலோ கரும்புக்கு 109 கிலோ சர்க்கரை எடுக்கப்பட்டது. நடப்பாண்டு கரும்பு அரவை செய்து, 3.90 லட்சம் குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஆலையின் பங்குதாரரான விவசாயிகளுக்கு ஈவுத்தொகை வழங்க ஆலை நிர்வாகம் முடிவு செய்து, இதற்காக ₹3.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் பிரியா கூறியதாவது: சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2017-2018 முதல் 2021-2022 வரையிலான ஆண்டுகளில் ஈட்டப்பட்ட லாபத்தில் உரிய பங்கு ஈவுத் தொகையை, தமிழ்நாடு கூட்டுறவு சட்டம் மற்றும் துணை விதிகளுக்கு உட்பட்டு 7வது பொதுப்பேரவை ஒப்புதலுடன், பங்கு ஒன்றுக்கு ₹76 அங்கத்தினர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அங்கத்தினர்களில் அ.எண் 1 முதல் 34,080 வரையுள்ள நாளது வரை பங்கு ஈவுத்தொகை பெறாத அங்கத்தினர்கள், தங்கள் பகுதியின் கோட்ட கரும்பு அலுவலகத்தையோ (அ) கரும்பு உதவியாளரையோ (அ) தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். உரிய விண்ணப்ப படிவத்தை பெற்று, அதனை பூர்த்தி செய்து, அத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து வரும் ஆகஸ்ட் 15ம்தேதிக்குள் சம்மந்தப்பட்ட கோட்ட கரும்பு அலுவலகத்திலோ அல்லது கரும்பு உதவியாளரிடமோ ஒப்படைத்து, தங்களுக்குரிய பங்கு ஈவு தொகையை தங்களின் வங்கி கணக்கு மூலமாக பெற்று பயனடைய கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகையாக ₹3.21 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Gopalapuram ,Subramania Siva Cooperative Sugar Mill ,Dinakaran ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...