×

சிற்றார் வனப்பகுதியில் புலியை பிடிக்க சத்தியமங்கலத்தில் இருந்து சிறப்பு குழு வருகிறது ஆடுகளை இழந்தவர்களுக்கு வனத்துறை நிவாரண உதவி

அருமனை, ஜூலை 20: சிற்றார் வனப்பகுதியில் அட்டகாசம் செய்து வரும் புலியை பிடிக்க சத்திய மங்கலத்தில் இருந்து சிறப்பு குழு வருகிறது. குமரி மாவட்டம் சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் கடந்த 8ம் தேதி முதல் புலி ஒன்று குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது. பகல் முழுவதும் வனப்பகுதியில் பதுங்கிவிட்டு, நள்ளிரவு ஆனதும் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் புலி வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, நாய் என வீட்டு விலங்குகளை குறிவைத்து கொன்று வருகிறது. மனிதர்களையும் தாக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். அதேபோல் சிற்றாறு ரப்பர் தோட்ட தொழிலாளர்களும் அதிகாலையில் வேலைக்கு வர பயப்படுகின்றனர். புலியை பிடிக்க வனத்துறையினர் 2 கூண்டுகள் அமைத்தும், பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் காத்திருக்கின்றனர்.

ஆனாலும் அந்த புலி இன்னும் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க நேற்று முன் தினம் இரவு ஞானசுந்தரம் என்பவருக்கு சொந்தமான 6 ஆடுகளை புலி தாக்கி கொன்றது. மேலும் சிற்றாறு அரசு பள்ளி அருகே அன்னக்கொடி என்ற பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இரவில் நாய் வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த புலி, நாயை கவ்வி சென்று கொடூரமாக கொன்றது. மீண்டும் புலி நடமாட்டம் அதிகரித்து வருவதால் சிற்றாறு சிலோன் காலனி மக்கள் உயிர் பயத்தில் இரவு முழுவதும் விடிய விடிய கண்விழித்து கிடந்தனர். வீட்டின் கதவு, ஜன்னல்களை நன்றாக அடைத்துவிட்டு வீட்டின் உள்ளேயே முடங்கி கிடந்தனர்.

இந்தநிலையில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா ஆடுகளை பறிகொடுத்த ஞானசுந்தரம் வீட்டிற்கு சென்று அரசு நிவாரணம் ரூ.12 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். பின்னர்அவர் வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய ஆட்டுக் கொட்டையில் புலி எவ்வாறு வந்திருக்கிறது என்பதை பார்வையிட்டார். தொடர்ந்து வனச் சரகர் முகைதீனிடம் சத்திய மங்கலத்தில் இருந்து சிறப்பு குழு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அக்குழுவில் சில சிறப்பு மருத்துவர்கள் இருப்பார்கள் என்றும், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து வன உதவியாளர்களுடன் ஊர் இளைஞர்கள் மற்றும் காட்டில் அதிகம் அனுபவம் உள்ளவர்கள் கொண்ட ஒரு குழு அமைத்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் இளையராஜா அறிவுறுத்தினார். சிற்றாரில் குடியிருப்பு பகுதியில் மேலும் ஒரு கூண்டு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. காயமடைந்த ஆடு, மாடுகளுக்கு களியல் கால்நடை உதவி மருத்துவர் செந்தில் லேகா தலைமையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

The post சிற்றார் வனப்பகுதியில் புலியை பிடிக்க சத்தியமங்கலத்தில் இருந்து சிறப்பு குழு வருகிறது ஆடுகளை இழந்தவர்களுக்கு வனத்துறை நிவாரண உதவி appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Chittar forest ,Arumanai ,Chittar forest Forest ,Dinakaran ,
× RELATED பெரும்பள்ளம் அணை பகுதியில் பகல் நேரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை