×

தனியார்மயத்தை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த கோரி ரயில்வே துறையை கண்டித்து ஆக.10ம் தேதி போராட்டம்: எஸ்ஆர்எம்யூ கன்னையா பேட்டி

சென்னை: ரயில்வேதுறை தனியார்மயமாக்கலை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆகஸ்ட் 10ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் கன்னையா அறிவித்துள்ளார். சென்னை பெரம்பூர் புளியந்தோப்பு ரயில்வே காலனி மைதானத்தில் எஸ்ஆர்எம்யூ ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் இளைஞர்களின் மாநாடு நேற்று மதியம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முன் எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் கன்னையா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அனைத்திந்திய ரயில்வே ஊழியர் சம்மேளனம் தற்போது 100வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. அனைத்து ரயில் பெட்டிகளை ஏசி பெட்டிகளாக மாற்றினால் பாமர மக்கள், நடுத்தர மக்கள் பயன்படுத்த முடியாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஒன்றிய அரசு ரயில்வே துறையை தனியார் மயமாக்க மாட்டோம் என கூறினாலும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தனியார் மயமாக்கும் முயற்சி எடுத்து வருகிறது. ரயில்வே துறை இல்லை என்றால் மக்களுக்கு பெரிய இழப்பு ஏற்படும்.

மேலும் ரயில்வே துறை உள்ளிட்ட அனைத்து ஒன்றிய அரசு பணியாளர்களுக்கும் 2004ம் ஆண்டு முன்பு இருந்த பழைய ஓய்வூதியம் கொடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை முன்வைத்து வரும் ஆகஸ்ட் 10ம் தேதி டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்த உள்ளோம். இந்தியா முழுவதும் உள்ள ஒரு லட்சம் ரயில்வே தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். ரயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய அரசு குழு அமைத்துள்ளது. அதில் நானும் ஒரு உறுப்பினர் தொடர்ந்து எங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறோம். புறநகர் ரயில்களில் அனைத்து பெட்டிகளிலும் ஏசி வசதி கொண்டு வந்தால் ஏழை எளிய மக்கள் ரயிலை பயன்படுத்த முடியாது பெரும்பாலும் இந்த ரயில்கள் தனியாரிடம் தான் செல்லும். வந்தே பாரத் ரயில்களுக்கு மக்களிடையே வரவேற்பு இருந்திருந்தால் கட்டணத்தை 25 சதவீதம் குறைத்திருக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வின்போது எஸ்ஆர்எம்யூ தலைவர் ராஜா ஸ்ரீதர். துணை பொதுச்செயலாளர் ஈஸ்வர் லால். சென்னை கோட்ட செயலாளர் பால் மெக்ஸ்வெல் ஜான்சன், பணிமனை கோட்ட செயலாளர் அறிவழகி ஆகியோர் உடன் இருந்தனர்.

The post தனியார்மயத்தை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த கோரி ரயில்வே துறையை கண்டித்து ஆக.10ம் தேதி போராட்டம்: எஸ்ஆர்எம்யூ கன்னையா பேட்டி appeared first on Dinakaran.

Tags : SRMU ,Kannaya ,Chennai ,
× RELATED வட கிழக்கு டெல்லியில் கன்னையா குமார் போட்டி: காங். அறிவிப்பு