×

அரசியல் அறிவிப்புகளை வெளியிடும் கவர்னர் புதுச்சேரியில் போட்டியிட தமிழிசை திட்டமா? மாஜி முதல்வர் பகீர் குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக, கவர்னர் தமிழிசை அறிவிப்புகளை வெளியிட்டு அரசியல் செய்து வருவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார். நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநரை வைத்து பாஜ அரசியல் செய்து வருகிறது. சில மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடத்தி வரும் பாஜ, முதல்வர் பதவியை பிடிக்க அரசியல் ஆயுதமாக ஆளுநர்களை பயன்படுத்தி வருகிறது. இதற்கு சிறந்த உதாரணம் புதுச்சேரி.

சமீபத்தில் பேட்டியளித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ‘முதல்வராக இருந்து எந்த முடிவும் எடுக்கவில்லை. மசோதாக்களுக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் கொடுக்காததால் மக்கள் நலத்திட்டங்களை செய்ய முடியவில்லை. நான் ஏன் முதல்வராக இருக்கேன் என்றே தெரியவில்லை. சீட் மட்டும்தான் முதல்வர் இருக்கை. ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதற்கு பின் வாசல் வழியாக சென்றுவிடலாம் என்று தோன்றுகிறது’ என விரக்தியின் உச்சத்தில் பேசினார்.
இதுகுறித்து பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ‘ஆளுநருக்கு செய்ய வேண்டிய சீர்வரிசையை முதல்வர் செய்யவில்லை’ என்று கிண்டலடித்தார்.

இதற்கு பதிலளித்த ஆளுநர் தமிழிசை, ‘முதல்வர் ரங்கசாமியும், நானும் அண்ணன் தங்கை. எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை’ என்று தெரிவித்தார். இருப்பினும், முதல்வர்-கவர்னர் இடையேயான மோதல் நீடித்துதான் வருகிறது. ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் பாஜவுக்கு எதிராக எந்த முடிவும் எடுக்க முடியாமல் அவர்கள் சொல்லுக்கும் பேச்சுக்கும் முதல்வர் ரங்கசாமி தலையாட்டி வருகிறார். இதனை பயன்படுத்தி ஆளுநர் தமிழிசை அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவுகளை அவர் எடுத்து வருகிறார். அரசு உருவாக்கும் திட்டங்களை கிடப்பில் போடுகிறார்.

இந்நிலையில், தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்குவது நடைமுறையில் உள்ளது. இதேபோல், புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ரங்கசாமிக்கு, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரை செய்துள்ளார். அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவுகளை ஆளுநர் பரிந்துரைத்ததற்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிரதமர் மோடி தலைமையில் 38 கட்சிகள் இணைந்து கூட்டம் போட்டிருக்கிறார்கள். இதில் மோடி தனது கொள்கையை தெரிவிக்காமல் எதிர்க்கட்சிகளை வசைபாடி இருக்கிறார். இதில் இருந்து மோடி, அமித்ஷாவுக்கு பயம் வந்து விட்டது. மதசார்பற்ற கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்கும் தலைவராக உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பழிவாங்கும் எண்ணத்துடன், தமிழக அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோர் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறையை வைத்து சோதனை நடத்தி தொல்லை கொடுக்கின்றனர். இந்த மிரட்டலுக்கெல்லாம் எதிர்க்கட்சிகள் அஞ்சாது. மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் உறுதியாக நின்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, நான் முதல்வராக இருந்தபோதே ஒரு சட்ட வரையறையை தயார் செய்து ஒப்புதலுக்கு அனுப்பினேன். அப்போது கவர்னராக இருந்தவர் அதனை ஏற்காமல், உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்து விட்டார். உண்மையிலேயே மாணவர்கள் மீது முதல்வருக்கும், துணைநிலை ஆளுநருக்கும் அக்கறை இருந்தால் டெல்லி சென்று உள்துறை அமைச்சகத்தில் நிலுவையில் உள்ள கோப்புக்கு ஒப்புதல் பெற வேண்டும். அதனை விடுத்து புதிதாக கோப்பு அனுப்புகிறோம் என்பதெல்லாம் அரசியலுக்காகத்தான். தூத்துக்குடியில், கன்னியாகுமரியில் தேர்தலில் நின்றால் போணியாக மாட்டோம் என்று தெரிந்து கொண்டு, புதுச்சேரி தொகுதியில் நிற்க முடிவெடுத்த தமிழிசை, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அரசியல் செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

* பாஜ எம்எல்ஏ குடும்ப பெயரில் கோயில் நிலம் பத்திரப்பதிவு
நாராயணசாமி கூறுகையில், ‘புதுச்சேரியில் பத்திரப்பதிவு துறையில் இமாலய ஊழல் நடக்கிறது. பணம் கொடுத்தால்தான் பத்திரப்பதிவு செய்யப்படும் என்ற நிலை உள்ளது. பல கோயில் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகிறது. காமாட்சி அம்மன் கோயில் நிலம் பாஜ எம்எல்ஏவின் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே இதனை அமலாக்கத்துறை விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது, சிபிஐ விசாரிக்க வேண்டும். கோயில் நிலத்தை முறைகேடாக பதிவு செய்த பத்திரங்களையும் ரத்து செய்ய வேண்டும்’ என்றார்.

The post அரசியல் அறிவிப்புகளை வெளியிடும் கவர்னர் புதுச்சேரியில் போட்டியிட தமிழிசை திட்டமா? மாஜி முதல்வர் பகீர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Tamilisai ,Puducherry ,Chief Minister ,Baghir ,Lok Sabha ,Narayanasamy ,Former ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு காங். தலைவர்...