×

டிசி கொடுப்பதாக ஆசிரியை மிரட்டியதால் மாணவி தற்கொலை: உதவி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

புளியங்குடி: ‘டிசி கொடுத்து விடுவேன்’ என ஆசிரியை கண்டித்ததால் அரசு பள்ளி பிளஸ் 1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்காசி மாவட்டம், புளியங்குடி டிஎன்.புதுக்குடியை சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது மகள் முனீஸ்வரி என்ற முகிலா (16). அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். தந்தை கருப்பசாமி 10 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். தாய், கட்டிட வேலை பார்த்து மகளை படிக்க வைத்தார். கடந்த 17ம் தேதி பள்ளிக்கு சென்ற முனீஸ்வரி, இடைவேளை நேரத்தில் அலுவலக அறைக்கு சென்று ஸ்காலர்ஷிப் தொடர்பான சான்றிதழ் வாங்கி வந்துள்ளார். இதனால் விலங்கியல் பாட வகுப்பில் பங்கேற்க தாமதமாகியுள்ளது. இதையடுத்து வகுப்பிற்குள் உதவி தலைமை ஆசிரியை அனுமதிக்காமல் வெளியே நிற்குமாறு கூறி விட்டாராம். இதனால் முனீஸ்வரி மனம் உடைந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற முனீஸ்வரியிடம் பள்ளி தலைமை ஆசிரியை, விலங்கியல் பாட பிரிவில் பங்கேற்க தாமதம் குறித்து கண்டித்ததுடன் டிசி வழங்கி விடுவதாக மிரட்டினாராம். டிசி வழங்கி விட்டால் தாய்க்கு அவமானமாகி விடும் என்று கருதிய முனீஸ்வரி, நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் விசாரணை நடத்தினர். வீட்டில் முனீஸ்வரி எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர்.

அதில் ‘பள்ளியில் ஏற்பட்ட தாமதம் குறித்து உதவி தலைமை ஆசிரியை, சக மாணவிகள் முன்னிலையில் என்னை திட்டினார். மேலும் பள்ளி தலைமை ஆசிரியை வந்த பின்னர் உனக்கு டிசி (பள்ளி மாற்றுச்சான்றிதழ்) கொடுத்திருவேன் என்றார். எனக்கு டிசி கொடுத்தால் என் தாய்க்கு தான் அவமானமாகி விடும். நான் டாக்டருக்கு படிக்க விரும்பினேன். படிக்க முடியவில்லை. உங்களை விட்டு பிரிகிறேன்’ என எழுதியிருந்தார். குற்றம் சாட்டப்பட்ட உதவி தலைமை ஆசிரியை இந்த மாதத்துடன் ஓய்வு பெறும் நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

The post டிசி கொடுப்பதாக ஆசிரியை மிரட்டியதால் மாணவி தற்கொலை: உதவி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : DC ,Pleyangudi ,Government School Plus 1 ,
× RELATED ராம நவமியால் ஐபிஎல் போட்டிகளில் மாற்றம்!