×

ஸ்கூல் பேக், உடல் வெவ்வேறு கிணறுகளில் மிதந்தன பள்ளி மாணவன் மரணத்தில் தொடரும் மர்மம்: சோத்துப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரின் மகன் சஞ்சய் (13). 8ம் வகுப்பு படித்து வந்தார். இவர், கடந்த வெள்ளிக்கிழமை, பள்ளிக்கு சென்றார். இதனையடுத்து மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் உறவினர்கள் மற்றும் மாணவனின் நண்பர்கள் வீடுகளில் சஞ்சய்யை தேடினர். மாணவன் கிடைக்கவில்லை. பின்னர் மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் பள்ளியின் அருகே உள்ள கிணறு ஒன்றில் மாணவனின் ஸ்கூல் பேக் மற்றும் லஞ்ச் பேக் ஆகியவை மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தீயணைப்புத் துறையினர் உதவியுடன் அந்த கிணற்றில் போலீசார் தீவிரமாக தேடினர். தொடர்ந்து மோட்டார் பம்புகள் வைத்து கிணற்றில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றிவிட்டு பார்த்தபோதும் அங்கு சஞ்சய் கிடைக்கவில்லை. இதனால் மாணவன் கிணற்றில் தவறி விழுந்து இறக்கவில்லை என்பது உறுதியானது. ஆனால் அவரது ஸ்கூல் பேக் மற்றும் லன்ச் பேக் மட்டும் கிணற்றில் எப்படி மிதந்தன என்பதில் சந்தேகம் எழுந்தது. அவைகளை மாணவனே வீசிவிட்டுச்சென்றாரா, அல்லது வேறு யாரும் எறிந்துவிட்டு மாணவனை கடத்தினார்களா என்ற கோணத்தில் மேல்மருவத்தூர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் சோத்துப்பாக்கம் ஊராட்சியின் மற்றொரு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் சஞ்சய்யின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார், மாணவனின் உடலை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு கிணற்றில் மாணவனின் ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் மிதந்த நிலையில், அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு வயல்வெளி கிணற்றில் மாணவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த 2 நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஏராளமான சந்தேகங்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்‌. தற்கொலை செய்ய முடிவு எடுத்து போலீசாரை குழப்ப மாணவன் இப்படி செய்து இருப்பானா? அல்லது இதில் மர்ம நபர்களின் செயல் இருக்குமா? என்ற கேள்வியும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் சோத்துப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஸ்கூல் பேக், உடல் வெவ்வேறு கிணறுகளில் மிதந்தன பள்ளி மாணவன் மரணத்தில் தொடரும் மர்மம்: சோத்துப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Sothupakkam ,Madhuranthakam ,Chothupakkam ,Melmaruvathur ,Chengalpattu district ,Parthiban ,
× RELATED மதுராந்தகத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு