×

சட்டத் திருத்தம் தேவையில்லை குண்டர் சட்ட நடவடிக்கைகளை கலெக்டர்கள் மேற்கொள்வதே சரி: ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு பதில்

மதுரை: குண்டர் சட்ட நடவடிக்கையை கலெக்டர்கள் மேற்கொள்வதே சரியானது என்றும், சட்டத்திருத்தம் தேவையில்லை என்றும் ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பொன்மான்துறையைச் சேர்ந்த நாகராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் மகன் தமிழழகன் (28) மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள திண்டுக்கல் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். உரிய காலத்தில் ஆவணங்கள் வழங்கவில்லை. எனவே, என் மகன் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், குண்டர் சட்ட நடவடிக்கைகளுக்கு உத்தரவிடும் அதிகாரத்தை காவல் துறை ஐஜி அல்லது போலீஸ் கமிஷனர்களுக்கு வழங்கிடும் வகையில் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளதா என்பது குறித்து அரசுத் தரப்பில் விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டிருந்தனர். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், எம்.நிர்மல் குமார் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசின் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா ஆஜராகி, ‘‘குண்டர் சட்ட நடவடிக்கை தொடர்பான தற்போதைய நடைமுறை தொடர்வதே சரியானதாக இருக்கும்.

குண்டர் சட்ட ஆணையை பிறப்பிக்கும் அதிகாரம் ஐஜிக்களிடம் இருப்பதை விட, கலெக்டர்களிடம் இருப்பது தான் சரி. 38 மாவட்டங்கள் இருக்கும் நிலையில், காவல்துறையைப் பொறுத்தவரை வடக்கு, மேற்கு, மத்தி மற்றும் தெற்கு என்று நான்கு மண்டலங்களில் நான்கு காவல்துறை தலைவர்கள் (ஐஜிக்கள்) உள்ளனர். ஓவ்வொரு மண்டல காவல்துறை தலைவரின் கீழ் குறைந்தபட்சம் பத்து மாவட்டங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள எஸ்பிக்களின் பணியை மேற்பார்வை செய்வதுடன், அந்தந்த மாவட்டங்களின் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் பிற பணிகளைக் கவனிப்பதில் தான் காவல்துறைத் தலைவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

தற்போது பயன்பாட்டிலுள்ள குண்டர் சட்ட விதிகள் சீராக உள்ளதால், இந்த நடைமுறை விதிகளையே பின்பற்றலாம். குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கைகளை கலெக்டர்கள் பிறப்பிப்பதே சரியாக இருக்கும். ஏனெனில் இது குண்டர் சட்ட அதிகாரத்தை தன்னிச்சையாகவும், தவறாகவும் பயன்படுத்துவதை தடுக்கும். எனவே, குண்டர் சட்ட நடவடிக்கை தொடர்பான விதிகளில் திருத்தங்கள் ஏதும் செய்யத் தேவையில்லை என தமிழ்நாடு அரசு கருதுகிறது’’ என்றார். இது அரசின் கொள்கை முடிவு ெதாடர்பான விவகாரம் எனக்கூறிய நீதிபதிகள் மனுவை முடித்து வைத்தனர்.

The post சட்டத் திருத்தம் தேவையில்லை குண்டர் சட்ட நடவடிக்கைகளை கலெக்டர்கள் மேற்கொள்வதே சரி: ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு பதில் appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,iCort ,Madurai ,Igord ,Branch ,Dinakaran ,
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...