×

பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை தடுக்க வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி: தீவிரவாதிகள் 5 பேர் கைது

பெங்களூரு: பெங்களூரு மாநகரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த சந்தேகப்படும் தீவிரவாதிகளான ஐந்து பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 7 துப்பாக்கி, 45 தோட்டாக்கள், வெடி பொருட்கள் உள்பட பலவற்றை பறிமுதல் செய்தனர். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சில விஷமிகள் திட்டமிட்டுள்ளதாக மாநில உளவுத்துறை போலீசாருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் கிடைத்தது. பெங்களூரு ஆர்டி நகருக்கு சென்று வீட்டில் பதுங்கி இருந்தவர்களை அதிகாலை சுற்றி வளைத்தனர். அங்கிருந்த சையத், சுஹால், உமர், முதாசீர் மற்றும் ஜாஹித் ஆகிய ஐந்து பேரை அதிரடியாக ைகது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 வாக்கி-டாக்கி, 7 உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், 42 தோட்டாக்கள், 2 சாட்டிலைட் போன்கள், 4 கையெறி குண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலை வழக்கில் சிறையில் இருந்தபோது, வெளிநாட்டை சேர்ந்த தீவிரவாதியுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் ஜாமீனில் விடுதலையாகிய பின், வெளிநாடுகளை சேர்ந்த தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்து சமூக விரோத மற்றும் தேசதுரோக செயலில் ஈடுபட்டு வந்ததாக தெரிய வந்துள்ளது. பெங்களூருவில் பெரியளவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அதிர்ச்சி தகவலையும் விசாரணையின் போது தெரிவித்தனர்.

இதனிடையில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடம் சிசிபி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். என்ஐஏ மற்றும் சிபிஐ அதிகாரிகளும் அவர்களிடம் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது. கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிசிபி போலீசார், கூடுதல் விசாரணை நடத்த 15 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனர். அதையேற்று போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜினைத் வெளிநாட்டில் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த போது, அவர்களை மூளை சலவை செய்து, தீவிரவாத சிந்தனை பக்கம் கொண்டு வந்ததுடன், ஜாமீனில் விடுதலையாகிய பின் சிறப்பு பயிற்சி கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மற்றொரு குற்றவாளியான டி.நாசீர், வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்தா தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் கூட்டத்தை தடுக்க திட்டம் ? இதனிடையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகள், பெங்களூருவில் இரண்டு நாட்கள் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் குண்டு வெடிப்பு நடத்த திட்டமிட்டதாகவும், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்ததால், தீவிரவாதிகளால் உள்ளே வர முடியாமல் ஏமாற்றம் அடைந்ததாகவும், அந்த ஏமாற்றத்தை போக்கி கொள்ள இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் மாநகரில் ஏதாவது ஒரு இடத்தில் அசம்பாவிதம் நடத்த திட்டமிட்டதாகவும் விசாரணையின் போது தெரியவந்துள்ளதாகவும் இந்த தகவலை மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் நேற்று காலை முதல்வர் சித்தராமையாவிடம் தெரிவித்தார்.

The post பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை தடுக்க வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி: தீவிரவாதிகள் 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Bangalore ,
× RELATED ஆபாச வீடியோ சர்ச்சை: பெங்களூருவில்...