
சென்னை: 2006 முதல் 2011ம் அண்டு வரை தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய எஸ்.ராமசாமி அரசுக்காக ஆஜராகி வாதிட்ட வழக்குகளுக்கான கட்டணத்தின் பாக்கி தொகை ஒரு கோடியே 95 லட்சத்து 1622 ரூபாயை வழங்க உத்தரவிடக் கோரி 2011ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி 2 வாரங்களில் பாக்கி கட்டணத்தை தர வேண்டுமென்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து 2012ம் ஆண்டு தலைமை செயலாளர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ராமசாமிக்கு வழங்கப்படவேண்டிய வழக்கறிஞர் கட்டணம் கொடுக்கப்பட்டுவிட்டதாக அறிக்கை தாக்கல் செய்தார். அதில், இதுபோன்ற வழக்குகள் தொடர்ந்து வருவது குறித்து தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. 11 சதவீத தொகை மட்டுமே கொடுக்கப்பட்டு வருவதால் குறிப்பிட்ட ஒரு துறையை நியமித்து வழக்கறிஞர் கட்டண கோரிக்கைகளை பெற்று, ஆய்வு செய்து, கோரிக்கையை நடைமுறைபடுத்த வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டண பாக்கி குறித்த அறிக்கையை தயார் செய்து சம்பந்தப்பட்ட அரசு வழக்கறிஞர்களுக்கு அனுப்பவேண்டுமென்று கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தின் முக்கியத்துவத்தை ஏற்ற நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டண நடைமுறைகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படும் அதிகாரி, அரசுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டிய கட்டணத்துக்கான கோரிக்கைகளை பரிசீலித்து கட்டணங்களை வழங்க வேண்டும். சிறப்பு அதிகாரி பரிசீலித்து முடித்த 30 நாட்களுக்குள் தொகையை சம்மந்தப்பட்ட அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டும். சிறப்பு அதிகாரிக்கு உதவியாக போதுமான ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர். மேலும், சிறப்பு அதிகாரி நியமனம் தொடர்பாக அரசாண வெளியிட வேண்டுமென்று உத்தரவிட்ட நீதிபதிகள் இதுகுறித்த அறிக்கையை ஆகஸ்ட் 28ல் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
The post அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டண விவகாரம் சிறப்பு அதிகாரியை நியமனம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.