×

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடலுக்கு விடிய விடிய ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி: இன்று உடல் கோட்டயம் கொண்டு செல்லப்பட்டது

திருவனந்தபுரம்: பெங்களூரு மருத்துவமனையில் காலமான கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடலுக்கு நேற்று திருவனந்தபுரத்தில் ஆயிரக்கணக்கானோர் விடிய விடிய அஞ்சலி செலுத்தினர். இன்று காலை அவரது உடல் கோட்டயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கேரளாவில் 2 முறை முதல்வராக இருந்தவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான உம்மன் சாண்டி (79) தொண்டை புற்று நோய் காரணமாக பெங்களூருவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 4.25 மணியளவில் அவர் காலமானார். பெங்களூருவில் அவரது உடலுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்பட ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதன்பின் நேற்று பிற்பகல் அவரது உடல் விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது. திருவனந்தபுரத்திலுள்ள அவரது வீடு, தலைமைச் செயலகம், திருவனந்தபுரம் செயின்ட் ஜார்ஜ் ஆலயம் மற்றும் காங்கிரஸ் தலைமை அலுவலகம் ஆகிய இடங்களில் உம்மன் சாண்டியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஏ.கே. அந்தோணி, ரமேஷ் சென்னித்தலா உள்பட ஆயிரக்கணக்கானோர் விடிய விடிய அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை 7.30 மணியளவில் திருவனந்தபுரத்திலுள்ள உம்மன் சாண்டியின் வீட்டிலிருந்து அவரது உடல் கோட்டயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வழி நெடுகிலும் ஏராளமானோர் திரண்டு நின்று உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்பின் கோட்டயம் திருநக்கரை மைதானத்தில் உம்மன் சாண்டியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என்பதால் கோட்டயம் மாவட்டத்தில் இன்று பிற்பகலுக்கு பின்னர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாளை பிற்பகல் 2 மணியளவில் உம்மன் சாண்டியின் சொந்த ஊரான புதுப்பள்ளியிலுள்ள செயின்ட் ஜார்ஜ் கல்லறைத் தோட்டத்தில் அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. உம்மன் சாண்டிக்காக பாதிரியார்களை மட்டும் அடக்கம் செய்யப்படும் இடத்தில் சிறப்பு கல்லறை அமைக்கப்பட்டு வருகின்றது. நாட்டுக்கு செய்த சேவைக்காக உம்மன் சாண்டிக்கு இந்த சிறப்பு கல்லறை அமைக்கப்படுவதாக புதுப்பள்ளி செயின்ட் ஜார்ஜ் ஆலய பாதிரியார் வர்கீஸ் தெரிவித்தார்.

The post கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடலுக்கு விடிய விடிய ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி: இன்று உடல் கோட்டயம் கொண்டு செல்லப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Chief Minister of Kerala ,Umman Santi ,Kottayam ,Thiruvananthapuram ,Kerala ,Chief Minister ,Bangalore ,Dinakaran ,
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது