×

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழக ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளோம்: டி.ஆர்.பாலு பேட்டி

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழக ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளோம் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்:

முக்கிய பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம். தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்த முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். அரசியல் சட்டத்தை சிதைக்கும் வகையில் தமிழ்நாடு ஆளுநர் செயல்படுவதால் அவரை திரும்பப் பெற வேண்டும் என்று டி.ஆர்.பாலு கூறினார்.

விலைவாசி உயர்வு குறித்து பிரச்சனை எழுப்பப்படும்:

விஷம்போல் ஏறிவரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி உள்ளோம். நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு குறித்த பிரச்சனையை எழுப்ப முடிவு செய்துள்ளோம் என்றார்.

9 ஆண்டுகளாகியும் வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக:

ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளாகியும் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை. தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் எதையும் 9 ஆண்டுகளாகியும் நிறைவேற்றவில்லை. வேலையில்லா திண்டாட்டம் குறித்தும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப உள்ளோம் என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

காஷ்மீரை சிதைத்துவிட்டது ஒன்றிய அரசு:

சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் காஷ்மீரை ஒன்றிய அரசு சிதைத்துவிட்டதாக டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இணைச் செயலாளர் உள்ள ஒருவரை துணை நிலை ஆளுநராக நியமித்து ஒரு மாநிலத்தையே ஒன்றிய அரசு ஆட்சி செய்கிறது. பொதுசிவில் சட்டத்தை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வர மாட்டோம் என ஆளும்கட்சி கூறுவதை நாங்கள் நம்பமாட்டோம் என குறிப்பிட்டார்.

ஒடிசா ரயில் விபத்து குறித்தும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்:

டெல்லி நிர்வாகம் தொடர்பாக ஒன்றிய அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்தை எதிர்த்து குரல் எழுப்ப உள்ளோம். ஒடிசா ரயில் விபத்து குறித்தும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம் என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

சட்டம், ஒழுங்கை காப்பாற்ற பாஜக தவறிவிட்டது:

மணிப்பூரில் சட்டம், ஒழுங்கை காக்க ஆளும் பாஜக அரசு தவறிவிட்டதாக டி.ஆர்.பாலு குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர உதவத் தயார் எனக் கூறும் மோடியால் மணிப்பூரில் கவனம் செலுத்த முடியவில்லை. மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி உள்ளோம். மணிப்பூர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி நோட்டீஸ் அளிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.

மனித உரிமை மீறலில் ஈடுபடுகிறது அமலாக்கத்துறை:

கூட்டுறவு சங்கங்களில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரம் ஒன்றிய அரசால் பறிக்கப்பட்டுவிட்டதாக டி.ஆர்.பாலு சாடினார். அமலாக்கத்துறை, சிபிஐ-யை கொண்டு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமைச்சர்களை ஒன்றிய அரசு மிரட்டுகிறது. அமலாக்கத்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் மீது மனித உரிமை மீறல் நடத்தப்படுகிறது. விசாரணை என்ற பெயரில் மனித உரிமை மீறல்களில் அமலாக்கத்துறை ஈடுபடுவதாக டி.ஆர்.பாலு குற்றம்சாட்டினார்.

ஒரு ஆட்சி எப்படி நடக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக பாஜக ஆட்சி:

மாநில அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடும் விவகாரத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவு கிடைக்கும். ஒரு ஆட்சி எப்படி நடக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக பாஜக ஆட்சி செய்து வருகிறது என்றும் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

The post நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழக ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளோம்: டி.ஆர்.பாலு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Governor ,DR ,Balu ,Delhi ,
× RELATED வெளி மாநிலங்களில் இருந்து படிக்க...