×

வேங்கைவயல் வழக்கு விவகாரம்: சிறார்கள் 4 பேருக்கும் ஆக.21ம் தேதி டிஎன்ஏ மாதிரி பரிசோதனை எடுக்க முடிவு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் வழக்கு விவகாரத்தில் சிறார்கள் 4 பேருக்கும் நாளை மறுநாள் டிஎன்ஏ மாதிரி பரிசோதனை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நடந்து இன்றுடன் 206 நாட்கள் ஆகிறது. இந்த விவகாரத்தில் முதலில் தமிழக காவல்துறையினர் 20 நாட்கள் விசாரணை மேற்கொண்டார்கள். இதில் குற்றவாளி கண்டறியப்படாத பட்சத்தில் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை 158 சாட்சியங்களிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டனர். ஏற்கனவே குடிநீர் மாதிரியில் எடுத்த டிஎன்ஏ அடிப்படையில் அந்த பகுதியை சேர்ந்த 110க்கும் மேற்பட்ட நபர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த திட்டமிட்டனர். அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி 11 நபர்களுக்கு சம்மன் கொடுத்திருந்தனர். அதன்பிறகு மார்ச் 8ம் தேதி 10 நபர்களுக்கு சம்மன் அளித்திருந்தனர். இதுவரை 21 நபர்களுக்கு டிஎன்ஏ மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த 10ம் தேதி இறையூர் கிராமத்தை சேர்ந்த 3 சிறுவர்கள், வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுவர் என 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என புதுக்கோட்டை வன்கொடுமை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர். கடந்த 14ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 4 சிறுவர்களின் பெற்றோர்களும் டிஎன்ஏ மாதிரி பரிசோதனைக்கு சம்மதம் தெரிவிப்பதாக கூறினர். அதன் அடிப்படையில், புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரத்தில் 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய மாவட்ட வன்கொடுமை நீதிபதிஉத்தரவிட்டார்.

டிஎன்ஏ பரிசோதனை எப்போது என்பது குறித்து குழந்தைகள் நலக்குழு தலைவரிடம் ஆலோசனை நடத்தலாம். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், காவல்துறை, சிறுவர்களின் பெற்றோர்கள் அடங்கிய குழு முடிவு செய்யும் எனவும் குறிப்பிட்டார். அதன்படி இன்று கூட்டம் நடைபெற்று வரும் 21ம் தேதி 4 சிறுவர்களுக்கும் ரத்த மாதிரி பரிசோதனை எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 21ம் தேதி காலை 11 மணிக்கு 4 சிறுவர்களுக்கும் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்படுகிறது.

அதன்பின்னர் அந்த மாதிரியை சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் ஒப்படைப்பார்கள். மீண்டும் நீதிமன்றம் அனுமதி பெற்று 4 சிறார்களின் ரத்த மாதிரி பரிசோதனையும் சென்னையில் உள்ள பகுப்பாய்வு மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்படும். முடிவுகள் வந்தபிறகு இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்படும் என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வேங்கைவயல் வழக்கு விவகாரம்: சிறார்கள் 4 பேருக்கும் ஆக.21ம் தேதி டிஎன்ஏ மாதிரி பரிசோதனை எடுக்க முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Venkaivyal ,Dinakaran ,
× RELATED போலீஸ் தாக்கியதால் பலி; புதுக்கோட்டை எஸ்.பி. பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை..!!