×

கட்டணமில்லா பேருந்து சேவை திட்டம் மகளிர் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது: திட்டக்குழு தகவல்

சென்னை: மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை மூலம் தினமும் 49 லட்சம் பெண்கள் பயணம் செய்கின்றனர் என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. கட்டணமில்லா பேருந்து சேவை திட்டம் மகளிர் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளதாக ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளனர். மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திற்காக 2023-24ஆம் நிதியாண்டில் ரூ.2,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கட்டணமில்லா பேருந்தில் 2021 மே 8 முதல் இதுவரை 311.61 கோடி முறை மகளிர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இயங்கும் பேருந்துகளில் 74.46% மகளிர் கட்டணமில்லா பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. கட்டணமில்லா பேருந்தின் மூலம் சராசரியாக மகளிர் சேமிக்கும் தொகை மாதம் ரூ.1000 என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை பயணம் செய்தவர்களுக்கான கட்டண தொகை 4,985.76 கோடி என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. சென்னையில் நடத்திய ஆய்வில் பெண்கள் மாதத்திற்கு சுமார் 50 முறை பேருந்தில் பயணிப்பதாக தகவல் அளித்துள்ளனர்.

2021ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டதும் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாகவும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் ஐந்தினைச் செயல்படுத்தும் விதமாகவும் ஐந்து உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்றுதான் சாதாரண கட்டணப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என்பதாகும். மகளிருக்கு நகர கட்டணப் பேருந்துகளில் இலவச பயணம் செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு மே 7ஆம் தேதியன்றே வெளியிட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் பயணம் செய்யலாம் என்று அந்த ஆணையில் கூறப்பட்டிருந்தது

மே 8ஆம் தேதி காலை சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் ஏறிய பெண்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஏழை, எளிய பெண்களுக்கு இந்த திட்டம் பேருதவியாக அமைந்தது. வேலைக்குச் செல்லும் மகளிரால் கொண்டாடப்பட்டது. பெண்களின் இலவச பயணத்தையும் ஒரு ஒழுங்குப்படுத்தி, அதன் தரவுகளை வைத்திருக்க விரும்பிய தமிழக அரசு, தனியாக மகளிருக்கு இலவச பயணம் என்று குறிப்பிட்டு டிக்கெட்டுகளையும் அச்சடித்து வழங்கியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்திருக்கும் நிலையில் அந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்பட்டது. அதனால் பயன்பெற்றோர் எத்தனை பேர் என்ற தரவுகள் கிடைத்துள்ளன. 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி, தமிழ்நாட்டில் இயக்கப்படும் மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 876. அதில், மாநில அரசு சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் 20 ஆயிரத்து 926, சிறிய பேருந்துகள் 4 ஆயிரத்து 92, அதன்படி, இலவச பயணத் திட்டத்துக்காக 7 ஆயிரத்து 321 சாதாரண பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதில், நாளொன்றுக்கு 36 லட்சம் பெண்கள் பயணம் செய்துள்ளனர். ஏப்ரல் மாதம் இறுதி வரையில் சுமார் 115 கோடி பெண்கள் பயணித்துள்ளனர். இந்தத் திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.1,500 கோடி அளவில் செலவிடப்படுகிறது என்று ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று வரை மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை மூலம் தினமும் 49 லட்சம் பெண்கள் பயணம் செய்கின்றனர் என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. கட்டணமில்லா பேருந்து சேவை திட்டம் மகளிர் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளதாக ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளனர்

The post கட்டணமில்லா பேருந்து சேவை திட்டம் மகளிர் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது: திட்டக்குழு தகவல் appeared first on Dinakaran.

Tags : SPC Info ,Chennai ,Government of Tamil Nadu ,Daugherless Tole-free Bus Service ,SPC ,
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...