×

சுக்கிரன் – சனி எனும் தன வசிய யோகம்

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

ஜோதிடத்தில் அசுர குருவும் (சுக்) அசுப தலைவன் (சனி) இணைவு மோகனம் ஆகும். மோகனம் என்பது வசியம். அதாவது, தன எனச் சொல்லலாம். அசுர குருவாகிய சுக்கிரனும், அசுப தலைவன் சனி பகவானும் ஜாதகத்தில் இணைந்து நண்பர்களாகி அகமகிழ்வர். ஆம், சனி – சுக்கிரன் இரு கிரகங்களும் நட்புக் கிரகங்களே. அவைகள் இணையும் பொழுது, மிகுதியான நன்மை உண்டு.

நீதிக்கு அதிபதியாக விளங்குபவர் சனி பகவான். இன்பம், கலைகள் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றிற்கு அதிபதியாக இருப்பவர் சுக்கிரன். இவர்களின் இணைவு வசியம், எந்த பாவத்தில் இருந்து இவர்கள் தொடர்பு கொள்கிறார்களோ அந்த பாவத்தின் வழியே பண வசியத்தை செய்வார்கள்.

சுக்கிரன் – சனி இணைவுகள் எப்படி உண்டாகும்

சனிக்கு ஒன்றாம் (1-ஆம்) இடம், ஐந்தாம் (5-ஆம்) இடம், ஏழாம் (7-ஆம்) இடம், ஒன்பதாம் (9-ஆம்) இடம் ஆகியவற்றில் சுக்கிரன் இருந்தால், சுக்கிரன் – சனி இணைவுதான். சுக்கிரனின் நட்சத்திரமான பரணி, பூரம், பூராடம் ஆகியவற்றில் சனி இருந்தாலும் இணைவாகும். அதேபோல, சுக்கிரனும் சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரங்களில் இருந்தாலும், இணைவாகும். சுக்கிரனின் வீட்டில்தான் சனி பகவானும் உச்சம் அடைகிறார்.

நேரிடையாக இணையும் பொழுது, பலன்கள் ஒரு வகையாகவும் நட்சத்திரங்கள் வழியாக இணையும் பொழுது பலன்கள் வேறுமாதிரியும் இருக்கும். சில நேரங்களில், வக்ரகதியில் இந்த கிரகங்கள் இணையும் வாய்ப்புகள் உண்டு. அப்பொழுது, வேறு மாதிரியான பலன்கள் உண்டு. சனிக்கு ஐந்தாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தில், சனி பகவான் வக்ரம் பெறுகிறார். சுக்கிரன், சூரியனுக்கு எட்டு பாகைக்குள் வரும் போது வக்ரம் அடைகிறது. சனியும் சுக்கிரனும் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும், கிட்டத்தட்ட இணைவாக கொள்ளலாம்.

சுக்கிரன் – சனி இணைவில் பலன்கள் எப்படி?

* இந்த கிரக இணைவு உள்ளவர்களுக்கு பொருளாதார மேன்மை உண்டு. படிப்படியாக பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி பயணித்துக் கொண்டே இருப்பார்கள். லட்சுமி கடாட்சம் உள்ள ஜாதகராக இவர் இருப்பார். பணப்பிரச்னை என்பது சுக்கிரன் – சனி இணைவு உள்ளவர்களுக்கு இருக்காது. அப்படி இருந்தாலும், மிக எளிதாக சமாளிக்கும் தந்திரம் அறிந்தவர்கள்.

* பொதுவாக இந்த அமைப்பு நான்காம் இடத்தில் இருந்தால், நிறைய ஆடைகள் வைத்திருப்பர். ஆனால், ஆடைகள் இவர்களுக்கு பொருந்தாது. இல்லாவிடில் ஆடைகளில் ஏதேனும் குறைகள் இருக்கும். பழைய வீடாக இருந்தாலும், சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

* புளிப்பு சுவையை அதிகம் விரும்புபவர்களாக இருப்பர்.

* சனி பகவான் எதையும் தாமதப்படுத்துவார். தாமத திருமணம் ஏற்பட வாய்ப்புண்டு. சுக்கிரன் – சனியை குரு பார்வை செய்தால், தோஷம் குறையும். பரிகாரம் உண்டு.

* திருமணத்திற்குப் பின் இவர்களுக்கு யோகமான அமைப்பு உண்டாகும்.

* இவர்களுக்கு நகையின் மீது அதிக ஈர்ப்பு உண்டு. ஆதலால், நகைத் தொடர்பான தொழில் செய்யும் எண்ணம் இருக்கும். அதற்கு மற்றொரு கிரகமான வியாழனும் வலிமையாக இருக்க வேண்டும்.

* சிலர் வாகனம் ஓட்டுவதற்கு அஞ்சுவார்கள். சிலர் வாகனம் ஓட்டுவதற்கு அஞ்சமாட்டார்கள். இந்த வேறுபாட்டிற்கு கிரகங்களின் வலிமைதான் காரணம். சனி வலிமையாக இருந்தால், வாகனம் ஓட்டுவதற்கு அச்சம். ஆதலால், வாகனம் ஓட்டத் தெரிந்தாலும் ஓட்ட மாட்டார்கள். சுக்கிரன் வலிமையாக இருந்தால் வாகனத்தை வேகமாக செலுத்துவார்கள்.

* இந்த இணைவு உள்ளவர்களுக்கு, கண் பார்வை குறைபாடு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு அசுபகிரகங்கள் இணைவதால், கண் பார்வை வெகுவாக பாதிக்க வாய்ப்புண்டு. சிலருக்கு கண் தொடர்பான அறுவை சிகிச்சைகள் ஏற்படுவதும் உண்டு.

* சிலர் நவரத்தினங்களில் ஒன்றான வைரம் தொடர்பான தொழில் செய்வர். அதாவது, வைரம் பட்டை தீட்டுதல், வைர வியாபாரம் போன்றவை. இந்த தொழில் இவர்களுக்கு மிகுந்த லாபத்தினை ஈட்டும்.

* டெக்ஸ்டைல் தொடர்பான துறைகளிலும் சிலருக்கு நல்ல வாய்ப்புண்டு. ராகு, இந்த கிரகங்களுடன் தொடர்பு ஏற்பட்டால் இந்த வாய்ப்பு ஏற்படும். இந்த கிரகங்கள் இருக்கும் இடத்தினை பொருத்து சில குறிப்பிட்ட பலன்கள் ஏற்படும். ஏழாம் (7-ஆம்) இடத்தில் இருந்தால், டெக்ஸ்டைல் விற்பனை தொடர்பும், பத்தாம் (10-ஆம்) இடத்தில் இருந்தால் துணி உற்பத்தி மற்றும் தறி நெய்தல் தொடர்பான துறைகளிலும் வாய்ப்புண்டு.

* சுக்கிரன் வலுவாக இருந்து சனியுடன் இணைவு இருந்தால், சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

* பழைய கலைகளை கற்றுக் கொள்ளும் ஆர்வம் இவர்களுக்கு உண்டு. உலகியல் ஜோதிடத்தில் ஏற்படும் மாற்றங்கள்

* சனி என்பது மேகத்திற்கு காரகமாக உள்ளது. குறிப்பாக கரிய மேகத்தை சனியுடன் சொல்லலாம். சுக்கிரனின் காரகமாக மழை உள்ளது. நீர் ராசிகளிலோ நீர் கிரகங்களுடன் இணைவுகள் ஏற்படும் போது அதிகமான மழை பொழிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

* சுக்கிரனிற்கு காரகமாக காய்கறிகள், பழங்கள் உள்ளதால். சுக்கிரனை சனி பார்வை செய்யும் காலங்களில் பழங்கள், காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்படும். ஆதலால், விலை உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சுக்கிரன் – சனி சேர்க்கைக்கான பரிகாரம்

* லட்சுமி நாராயணனனை சனிக்கிழமை அன்று தரிசனம் செய்வது சிறந்த பலன் தரும்.

* அம்பாளுக்கு வெள்ளிக்கிழமை ரோஸ் கலர் வஸ்திரம் கொடுத்து வழிபாடு செய்வது சிறந்த பரிகாரம்.

* குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினால் சிறந்த மேன்மை மற்றும் தனவிருத்தி உண்டாகும்.

* அஷ்ட லட்சுமியை வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை வழிபட்டாலும் அல்லது வெள்ளிக்கிழமை சனி ஓரையிலும் சனிக்கிழமை சுக்ர ஓரையிலும் வழிபாடு செய்தால் நற்பலன்கள் உண்டு.

* எள்ளில் செய்யப்பட்ட இனிப்பான பண்டங்களை தானமாக வழங்குவதால் சில தோஷங்கள் இவர்களுக்கு ஏற்படாது.

* வசதி இருந்தால் வைரத்திலான மூக்குத்தியை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துங்கள் உங்களின் தோஷங்கள் விலகும்.

The post சுக்கிரன் – சனி எனும் தன வசிய யோகம் appeared first on Dinakaran.

Tags : Sivaganesan ,
× RELATED ருசக யோகம்