×

திருவான்மியூரில் இன்று அதிகாலை கண்டக்டரை தாக்கி செல்போன் பறிப்பு: 3 பேருக்கு போலீஸ் வலை

துரைப்பாக்கம்: திருவான்மியூர் சிக்னல் அருகே இன்று அதிகாலை வேலை முடிந்து வீடு திரும்ப நின்று கொண்டிருந்த மாநகர பேருந்து கண்டக்டரை தாக்கி செல்போன் பறித்த 3 பேர் கொண்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகா, நிம்மூர் அஞ்சல், நந்திவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன் (40). இவர், சென்னை திருவான்மியூர் மாநகர போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக வேலைபார்த்து வருகிறார். இவர் இன்று அதிகாலை வேலை முடிந்து வீடு செல்வதற்காக திருவான்மியூர் சிக்னல் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் அவரிடம் இருந்து செல்போனை பறிக்க முயற்சித்தனர்.

அவர் தடுத்தார். ஆத்திரமான 3 பேர் கொண்ட மர்ம கும்பல் கற்களால் சரமாரி தாக்கிவிட்டு செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்றது. கண்டக்டர் வாசுதேவனுக்கு தலை, கை-கால்களில் படுகாயம் ஏற்பட்டதில் மயங்கி விழுந்துள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இப்புகாரின்பேரில் திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, கண்டக்டரை தாக்கி செல்போன் பறித்த 3 பேர் கொண்ட மர்ம கும்பலை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

The post திருவான்மியூரில் இன்று அதிகாலை கண்டக்டரை தாக்கி செல்போன் பறிப்பு: 3 பேருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Thiruvanmiyur ,Durai Pakkam ,
× RELATED திருவான்மியூரில் செயல்பட்ட...