×

சமுதாய வளர்ச்சிக்கு பணியாற்றியவர்கள் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: திருவள்ளூர் கலெக்டர் அறிவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிக்கை; சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாகும். 2023ம் ஆண்டிற்கான “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.

இந்த விருது தொடர்பாக கீழ்க்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. 15 வயது முதுல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த 1.04.2022 அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல்வேண்டும். 31.03.2023 அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல்வேண்டும். கடந்த நிதியாண்டில் 1.4.2022 முதல் 31.3.2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்கவேண்டும், சான்று இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 20ம் தேதி மாலை 4 மணி ஆகும். விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான http://www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த தங்களின் சாதனைப் பற்றிய பத்திரிக்கை செய்திகள், சான்றிதழ்கள், புகைப்படங்கள் மற்றும் விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து அனைத்து ஆவணங்களையும் 3 புத்தகங்களாக தயார் செய்து திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் வருகின்ற 21ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும்.

The post சமுதாய வளர்ச்சிக்கு பணியாற்றியவர்கள் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: திருவள்ளூர் கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Thiruvallur District ,Collector ,Alby John Varghese ,Dinakaran ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி