×

5 நிமிட மருத்துவ ஆலோசனைக்கு ரூ.300 வசூல் ‘டுபாக்கூர்’ எய்ம்ஸ் டாக்டர் கைது

கஞ்சம்: ஒடிசாவில் 5 நிமிட மருத்துவ ஆலோசனைக்கு ரூ. 300 வரை கட்டணம் வசூலித்த டுபாக்கூர் எய்ம்ஸ் டாக்டரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் சந்தா கிராமத்தைச் சேர்ந்த சுப்ரஜித் பாண்டா என்பவர், முறையான மருத்துவ பட்டம் பெறாமல் கிளினிக் நடத்தி வந்தார். அவர் தன்னை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் எனக்கூறிக் கொண்டார். நோயாளிகளிடம் 5 நிமிட மருத்துவ ஆலோசனைக்கு ரூ. 300 கட்டணம் வசூலித்து வந்தார்.

இந்நிலையில் சானமேரி கிராமத்தைச் சேர்ந்த சிமாஞ்சல் சாகு என்பவர், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தாயை, சுப்ரஜித் பாண்டாவின் கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றார். அங்கு சிமாஞ்சல் சாகுவின் தாயாருக்கு ஊசி மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது. இருப்பினும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மாறாக அந்த தாயின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைய தொடங்கியது.

இதையடுத்து அவர் பெர்ஹாம்பூரில் உள்ள எம்.கே.சி.ஜி மருத்துவமனைக்கு தனது தாயை அழைத்து சென்றார். பின்னர் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் தாயை சேர்த்தார். அங்கிருந்த மருத்துவர்களிடம், சுப்ரஜித் பாண்டா குறித்தும் கூறினார். அதிர்ச்சியடைந்த அவர்கள் மாவட்ட சுகாதார துறைக்கு தகவல்கள் கொடுத்தனர். அவர்கள் உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து சுப்ரஜித் பாண்டாவின் கிளினிக்கை சோதனையிட்டனர்.

விசாரணையில் அவர் போலி டாக்டர் என்றும், சட்டவிரோதமாக கிளினிக் நடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும், பல்வேறு கல்லூரிகளில் இருந்து போலி மருத்துவ சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் அவர் வைத்திருந்ததால் போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பெர்ஹாம்பூர் மாவட்ட போலீஸ் எஸ்பி சரவண விவேக் கூறுகையில், ‘போலி மருத்துவர் சுப்ரஜித் பாண்டா கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த போலி மருத்துவ சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன’ என்றார்.

The post 5 நிமிட மருத்துவ ஆலோசனைக்கு ரூ.300 வசூல் ‘டுபாக்கூர்’ எய்ம்ஸ் டாக்டர் கைது appeared first on Dinakaran.

Tags : Dupakur' ,AIIMS ,Ganjam ,Odissa Police ,Dupakur ,
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...