×

நாடாளுமன்ற அனைத்துக் கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பேன்: ஓ.பி.ரவீந்திரநாத் அறிவிப்பு

சென்னை: டெல்லியில் இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்துக்கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை முதல் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நாளை நடைபெற உள்ளது.

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள், மசோதாக்கள் பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்த கூட்டத்தின் போது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க ஒன்றிய அரசு கோரிக்கை வைத்திருந்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற அனைத்துக் கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பேன் என ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பை ஏற்று அதிமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக ஓ.பி.ரவீந்திரநாத் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தேனி மக்களவை தேர்தல் வழக்கில் ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

The post நாடாளுமன்ற அனைத்துக் கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பேன்: ஓ.பி.ரவீந்திரநாத் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Rabindranath ,CHENNAI ,O. P. Rabindranath ,Delhi ,Dinakaran ,
× RELATED தேனியில் 28 ஆண்டுக்கு பின் திமுக சாதனை...