×

அனுமதியின்றி செயல்பட்ட 12 மீன் கடைகள் அகற்றம்

 

புதுக்கோட்டை, ஜூலை19: புதுக்கோட்டை டிவிஎஸ் அருகே திருமயம் செல்லும் நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் பத்து ஆண்டுளுக்கு மேலாக 12க்கு மேற்பட்ட மீன் கடைகள் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. டிவிஎஸ் அருகே மீன் விற்பனையாளர்களுக்கு என்று ரூ.55 லட்சம் மதிப்பில் புதிதாக 20க்கும் மேற்பட்ட கடைகள் நகராட்சி மூலம் கட்டப்பட்டு நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மீன் கடைகள் திறக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் டிவிஎஸ் அருகே அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் மீன் கடைகளால் நகராட்சி மீன் மார்க்கெட்டில் வியாபாரம் பாதிக்கப்படுவதாக மீன் விற்பனையாளர்கள் நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் நேற்று நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஒன்று சேர்ந்து புதுக்கோட்டை டிவிஎஸ் அருகே சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த 12க்கும் மேற்பட்ட மீன் விற்பனை கடைகளை போலீசார் பாதுகாப்போடு நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் உதவியோடு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதி இல்லாமல் மீன் கடை வைத்திருந்தவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பிற்காக வந்திருந்த காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post அனுமதியின்றி செயல்பட்ட 12 மீன் கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,TVS ,Tirumayam ,Dinakaran ,
× RELATED கறம்பக்குடியில் அனைத்து கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரிக்கு அஞ்சலி