×

அரியலூரில் தமிழ்நாடு நாள் விழா பேரணி

 

அரியலூர், ஜூலை 19: அரியலூரில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழா பேரணியை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கு.சின்னப்பா (அரியலூர்), க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம்) ஆகியோர் முன்னிலையில் அரியலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நாள் விழா பேரணி நேற்று நடைபெற்றது. இந்த பேரணியை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி அரியலூர் பழைய பேருந்து நிலையம், அரியலூர் நகராட்சி அலுவலகம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வழியாக சென்று அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நிறைவுப்பெற்றது. இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!, எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!, தமிழன் என்று சொல்லுங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள், தமிழ் உயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும்!, இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!, வாழ்க தமிழ்! வெல்க தமிழ்நாடு!, தமிழுக்கு அமுதென்று பேர், என் தமிழே! என் தமிழ்நாடே!, வளம் பெற்று உயர்ந்த தமிழ்நாடே!, கலைப் பல பெற்று உயர்ந்த தமிழ்நாடே!, அண்ணா பெயர் சு+ட்டிய தமிழ்நாடு, யாதும் ஊரே! யாவரும் கேளீர்!” உள்ளிட்ட தமிழ்நாட்டின் சிறப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச்சென்றனர். இப்பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தமிழ்நாடு நாள் விழா பேரணியின் மூலம் தமிழ்நாடு நாள் குறித்து இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் என்றார். இப்பேரணியில், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி, அரியலூர் நகர்மன்றத்தலைவர் சாந்தி கலைவாணன், வட்டாட்சியர் கண்ணன், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அரியலூரில் தமிழ்நாடு நாள் விழா பேரணி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Day Festival ,Ariyalur ,Transport Minister ,S.S. S.S. Sivasangar ,Tamil Nadu Day Festival rally ,Dinakaran ,
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...