×

தமிழ்நாட்டை போல இந்திய அளவில் கூட்டணி அமைத்து வெற்றி பெற வியூகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: பெங்களூருவில் நடைபெற்ற மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: பெங்களூரு பயணம் மிகவும் சிறப்பாக இருந்தது. வெற்றிகரமாக அமைந்தது. இந்தியாவினுடைய ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம், மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படக்கூடிய நலன் இவையெல்லாம் மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. சர்வாதிகாரம், ஒற்றைத்தன்மை எதேச்சதிகாரத்தில் சிக்கி, நாடு சிதையுண்டு போய்க்கொண்டிருக்கிறது.

அதனால், ஒன்றிய பாஜவை தோற்கடிக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்காக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிறது. பெங்களூருவில் 26 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு பேசியிருக்கிறோம். தமிழ்நாட்டில் எப்படி கூட்டணி அமைத்து வெற்றியை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறோமோ, அதேபோல், இந்தியா முழுமையும், இதுபோன்ற ஒரு கூட்டணி அமைந்து அந்த வெற்றியை காணுவதற்கான வியூகங்கள் எல்லாம் வகுக்கப்பட்டிருக்கிறது. அகில இந்திய அளவில், கொள்கை கூட்டணியாக மாநில அளவில் தேர்தல் கூட்டணியாக இது அமையக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இக்கூட்டம் எனக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் நிச்சயமாக நம்பிக்கைத் தரக்கூடிய மகிழ்ச்சியாக அமையும். இக் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ளது.

அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும். அதில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பேசப்படும். யார் ஆட்சியில் இருக்கக்கூடாது என்பதுதான் எங்களுடைய கொள்கை. அதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். அமலாக்கத்துறை நடவடிக்கைகள் எல்லாம் எதிர்பார்த்த ஒன்று தான். போகப்போக இன்னும் பல கொடுமைகள் நடக்கும். அதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். அதிலும் நிச்சயம் வெற்றி காண்போம். எல்லாவற்றையும் சட்ட ரீதியாக சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம். தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய அமலாக்கத்துறை நடவடிக்கைகள் நியாயமானது என்கிறார் பிரதமர்.

பாஜ கூட்டணியில் இருப்பவர்களின் வழக்குகளை பற்றி மட்டும் அமலாக்கத்துறை கண்டும் காணாமல் இருக்கிறது அல்லவா அதுதான் நியாயமானது, அவரை பொறுத்தவரைக்கும். இன்றைக்கு பிரதமர் நடத்திய கூட்டத்தில் பக்கத்தில் யார் யாரை எல்லாம் உட்கார வைத்திருந்தார்கள், பார்த்தீர்களா. அவரால் குற்றம்சாட்டப்பட்ட, அவரால் ஊழல்வாதிகள் என்று சொல்லப்பட்டவர்கள் எல்லாம் இன்றைக்கு அந்த கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்களை அவர் அரவணைத்து கொண்டிருக்கிறார். அவர் எங்கள் கூட்டணியை விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

* ‘ஒன்றுபட்டு வெல்வோம்’
சென்னை: எதேச்சதிகாரவாதிகள் இறுதியில் வீழ்த்தப்படுவார்கள் என்பதைத்தான் வரலாறு காட்டுகிறது. ஒற்றுமைதான் நம் வலிமை, நாம் ஒன்றுபட்டால், இந்தியா வெல்லும் என டிவிட்டர் பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மதச்சார்பற்ற, ஜனநாயக இயக்கத் தலைவர்களுடன் பெங்களூருவில் வரலாற்றுச் சிறப்புமிகுந்த, ஆக்கப்பூர்வமான கூட்டத்தில் கலந்து கொண்டேன். பிரிவினை அரசியலின் கொடும் பிடியில் இருந்து இந்திய நாட்டின் பன்முகத்தன்மையைக் காக்கும் உறுதியுடன் ‘INDIA’ என்ற கொள்கைக் கூட்டணியை அமைத்துள்ளோம். தேசியம் எனும் முகமூடிக்குக் கீழே மறைந்துள்ள எதேச்சதிகாரவாதிகள் இறுதியில் வீழ்த்தப்படுவார்கள் என்பதைத்தான் வரலாறு காட்டுகிறது. ஒற்றுமைதான் நம் வலிமை, நாம் ஒன்றுபட்டால், இந்தியா வெல்லும்.

The post தமிழ்நாட்டை போல இந்திய அளவில் கூட்டணி அமைத்து வெற்றி பெற வியூகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,M.K. ,Bengaluru ,Stalin ,India ,Tamil ,Nadu ,
× RELATED நகரம் மற்றும் கிராமம் என்ற...