×

திருவள்ளூர் அருகே வாலிபரை கடத்திய வழக்கில் 5 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த ஸ்ரீதேவி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ் தாஸ் (27), இவரது மனைவி அனிதா (23). இந்நிலையில் நேற்று முன்தினம் உமேஷ் தாஸ் சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மனைவியுடன் சென்றிருந்தார். அப்போது, அங்கிருந்து அன்று காலை புறப்பட்டு சொந்த ஊரான ஸ்ரீதேவி குப்பத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வெள்ளவேடு அடுத்த புதுச்சத்திரம் அருகே வரும்போது பின்னால் தொடர்ந்த. கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் காரை வழிமறித்தனர். இதனால், உமேஷ் தாஸ் காரில் இருந்து கீழே இறங்கி உள்ளார்.

அப்போது, வாகனத்தில் இருந்த உமேஷ் தாஸின் மனைவி அனிதாவை தரதரவென கீழே இழுத்து இறக்கிவிட்டனர். பின்னர், உமேஷ் தாஸை அதே காரில் கடத்திச் சென்றனர். இதுகுறித்து உமேஷ் தாஸின் மனைவி அனிதா தனது கணவரை கடத்திச் சென்று விட்டதாக வெள்ளவேடு போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், பூந்தமல்லி உதவி ஆணையர் ஜவகர், ஆய்வாளர் இளையராஜா மற்றும் போலீசார் அனிதாவிடம் கடத்தல் குறித்து விசாரணை செய்தனர். அதில், வேலூரை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்கிய ஐஎப்எஸ் நிதி நிறுவனம் வேலூர் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு என தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கிளைகள் அமைக்கப்பட்டது.

இதில், சுமார் ஒரு லட்சம் நபரிடம் ரூ.6 ஆயிரம் கோடி முதலீடு பணத்தை மோசடி செய்து ஒரு கும்பல் தலைமறைவானது. இதில் ஓசூரை சேர்ந்தவர் ராஜேஷ் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டார். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டவரிடம் ரூ.100 கோடி முதலீடு பணத்தை பெற்று மோசடி செய்து தலைமறைவானர். இதில் பாதிக்கப்பட்ட கோபி, முருகன் என்ற இருவர் மட்டுமே தனது, நண்பரான ராஜேஷிடம் உறவினர்கள், நண்பர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் ரூ.100 கோடி வாங்கி முதலீடு செய்த பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. ஆனால், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு மட்டும் ராஜேஷ் ஆஜராகி வந்தார்.

இதனால், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள ராஜேஷ் மாமியார் வீட்டை வேவு பார்த்துள்ளனர். ஆனால், ராஜேஷ் அங்கு வராததால் அவங்க மச்சான் உமேஷ் தாஸை கடத்த திட்டம் தீட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் உமேஷ் தாஸ் தனது மனைவி அனிதாவுடன் சென்னை அடையாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் சென்று திருவள்ளூர் நோக்கி வந்தபோது வெள்ளவேடு அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் அவரது காரை மடக்கி கடத்தியது தெரியவந்தது. இந்நிலையில், கடத்தல்காரர்கள் சென்ற ஜிபிஎஸ் கருவி மூலம் வேலூர் அருகே துரத்தி பிடித்து உமேஷ் தாசை போலீசார் மீட்டனர். காரை பறிமுதல் செய்து 5 பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

விசாரணையில், ராஜேஷ்சிடம் ரூ. 100 கோடி வரை உறவினர்களிடம் வாங்கி கொடுத்த ஆரணியை சேர்ந்த முனுசாமி மகன் கோபி(34), ஆற்காடு பகுதியைச் சேர்ந்த முனியன் மகன் முருகன்(39) என தெரிய வந்தது. மேலும், இந்த கடத்தலுக்கு உடனடியாக ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் ராம்குமார்(34), விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கருணாநிதி மகன் தமிழரசன்(24) மற்றும் பவளரசன் ஆகியோர் இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று மாலை மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post திருவள்ளூர் அருகே வாலிபரை கடத்திய வழக்கில் 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Tiruvallur ,Umesh Das ,Anita ,Sridevi Kuppam ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...