×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தமிழ்நாடு நாள் விழா சிறப்பு கண்காட்சி: எம்பி, எம்எல்ஏக்கள், கலெக்டர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம்: தமிழ்நாடு நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டதையாட்டி, காஞ்சிபுரத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சியினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1.11.1956ம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 1ம் நாள் ‘தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் மிக சிறப்பாக கொண்டாடப்படும் என அறிவித்து ஆணை வெளியிடப்பட்டது. மேலும், மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி அண்ணாவால் 1967ம் ஆண்டு ஜூலை 18ம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள் தான் ‘தமிழ்நாடு நாள்’ என கொண்டாடப்பட வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

அந்த அமைப்புகளின் கோரிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் 30.10.2021 அன்று தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என அண்ணாவால் பெயர் சூட்டிய ஜூலை 18ம் நாளினையே ஆண்டுதோறும் தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு நாள் விழாவினை மாநிலம் முழுவதும் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அறியும் வண்ணமும், மேலும், தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணமும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்த தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பள்ளி மாணவ, மாணவியர்களை கொண்டு பதாகைகளை ஏந்தி பேரணி மற்றும் புகைப்பட கண்காட்சியை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 18ம் நாளினை ‘தமிழ்நாடு நாள் விழா’ என கொண்டாடும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புகைப்படக் கண்காட்சியை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் தொகுதி எம்பி செல்வம், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றிய குழுத்தலைவர்கள் தேவேந்திரன், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழுத்தலைவர் கருணாநிதி, மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் நித்தியா சுகுமார், மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டில்,நேற்று முதல் வரும் 23ம் தேதி வரை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. இதன் தொடக்கமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி கல்வித் துறையின் சார்பாக இராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரியிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரை 13 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலையில், கலெக்டர் ராகுல் நாத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு நகர்மன்றத் தலைவர் தேன்மொழி நரேந்திரன், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (பொ) .பவானி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சா.உதயகுமார், பள்ளி துணை ஆய்வாளர் .சிவகுமார், மாவட்ட கல்வி அலுவலர்ரவிசந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் குணாளன், இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் கீதா குமாரி, பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விக்டர், மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள பங்கேற்றனர்.

The post காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தமிழ்நாடு நாள் விழா சிறப்பு கண்காட்சி: எம்பி, எம்எல்ஏக்கள், கலெக்டர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Day Festival ,Exhibition ,Kanchipuram ,Chengalpattu ,Kanchipuram, Tamil Nadu Day ,Moe Andarasan ,Tamil Nadu ,Kanchipuram, Chengalbatu Diils Tamil Nadu Day Festival Special Exhibition ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...