×

ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள ஒன்றிய அமைச்சர்கள் 33 பேர் வீடுகளில் ரெய்டு நடக்காதது ஏன்? கே.எஸ்.அழகிரி கேள்வி

புவனகிரி: ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள ஒன்றிய அமைச்சர்கள் 33 பேர் வீடுகளில் ஏன் ரெய்டு நடக்கவில்லை என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புவனகிரியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் மீண்டும் ஒரு அமைச்சரை அமலாக்கத்துறை விசாரிக்கிறது. எதிர்பார்த்த ஒன்றுதான். மேடையில் சென்று மக்களிடம் வாதங்களை வைத்து வெற்றிபெற முடியாதவர்கள் கொல்லைப்புறமாக வந்து அடக்க நினைக்கிறார்கள். பாஜ ஆளும் மாநிலங்களில் இருப்பவர்கள் எல்லாம் அரிச்சந்திரர்களா? ஏன் எந்த மாநிலத்துக்கும் அமலாக்கத்துறை செல்லவில்லை.

மோடி அரசுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் பரப்புரை செய்கிறார் என்கிற ஒரே காரணத்திற்காக இந்த அரசை குற்றம் சாட்டுகிறார்கள். காங்கிரஸ் கட்சி இதை வன்மையாக கண்டிக்கிறது. தமிழக மக்கள் இதற்கு தலை வணங்க மாட்டார்கள். தமிழ்நாடு ஒரு சுயமரியாதை உணர்வு உள்ள மாநிலம். மோடி உள்ளிட்ட யாருடைய அடக்கு முறையையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒன்றிய அமைச்சர்கள் 33 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது.
ஏன் அவர்கள் வீடுகளில் ரெய்டு நடக்கவில்லை. ஒன்றிய அமைச்சர்கள் புனிதர்களா? அண்ணாமலை 200 பட்டியல் வேண்டுமானாலும் வெளியிடட்டும். எதைப் பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை. ஆளுநர் தனக்கு இல்லாத அதிகாரங்களை பேசுகிறார். ஆளுநர் அவரது கடமைகளை செய்ய வேண்டும். ஆளுநர் எடுத்த 3 நடவடிக்கைகளும் தோல்வி அடைந்துவிட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள ஒன்றிய அமைச்சர்கள் 33 பேர் வீடுகளில் ரெய்டு நடக்காதது ஏன்? கே.எஸ்.அழகிரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : K.K. S.S. Anakiri ,BUVANAKRI ,Congress ,K.K. S.S. Analakiri ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...