×

கேரளா ஒத்துழைப்புடன் ஆனைமலை ஆற்றின் குறுக்கே அணை பரம்பிக்குளம்-ஆழியாறு கால்வாய் நீரை வர்த்தக ரீதியாக பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சென்னை: கேரள அரசின் ஒத்துழைப்புடன் ஆனைமலை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படும் என்ற தமிழ்நாடு அரசு மீது நம்பிக்கை தெரிவித்த உயர் நீதிமன்றம், பரம்பிக்குளம்-ஆழியாறு கால்வாய் திட்ட நீரை எந்த வர்த்தக பயன்பாட்டுக்கும் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தப்படி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பொழியும் மழைநீரை சேகரித்து, அப்போதைய கோவை மாவட்டத்தில் இருந்த பல்லடம், உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம் வட்டங்களில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் 1967ம் ஆண்டு பரம்பிக்குளம் – ஆழியாறு கால்வாய் திட்டம் செயல்படுத்தபட்டது.

இந்த திட்டத்தில் 10 அணைகள், 4 மின் உற்பத்தி நிலையங்கள், 7 பாசன கால்வாய்கள், 6 முக்கிய கால்வாய்கள் அடங்கும். ஆரம்பத்தில் ஒன்றரை லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெற்ற நிலையில், தற்போது 4 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெற்று வருகின்றன.இந்நிலையில், பரம்பிக்குளம் – ஆழியாறு திட்ட கால்வாயிலிருந்து தமிழ்நாடு பகுதியில் ஆயக்கட்டு எனப்படும் பாசன பரப்புக்கு அப்பால் உள்ள பகுதிகளில் உள்ள ஆயக்கட்டுதாரர்கள் அல்லாதோர் தண்ணீர் எடுக்க அனுமதிக்க கூடாது, ஆயக்கட்டு பகுதியில் தண்ணீர் எடுக்கும் ஆயக்கட்டுதாரர்கள் அல்லாதோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கால்வாயிலிருந்து வர்த்தக பயன்பாட்டிற்கு தண்ணீர் எடுப்பதை தடுக்க வேண்டும், ஆயக்கட்டுதாரர்களின் நிலங்களில் உள்ள கிணறுகளில் இருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்க தங்களை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

இந்த வழக்குகள் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 1967ல் பிறப்பித்த அரசாணையில் கால்வாயிலிருந்து எவ்வளவு தூரத்தில் கிணறுகள் தோண்டலாம், எத்தனை குதிரைத்திறன் சக்தி கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்தலாம் உள்ளிட்டவற்றை 50 ஆண்டுகளுக்கு முன்பே வரையறுத்துவிட்டதால் திட்டத்தை மீண்டும் மறு ஆய்வு செய்ய அவசியம் இல்லை. ஆயக்கட்டு பகுதியில் நிலங்களை வைத்திருக்ககூடிய ஆயக்கட்டுதாரர்கள், அவர்களின் திறந்தவெளி கிணற்றிலிருந்து 5 மற்றும் 10 குதிரைத்திறன் கொண்ட மின் மோட்டாரை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்ற விதியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். அதில் விதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்ட கிணறுகளுக்கான மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும்.

பரம்பிக்குளம் – ஆழியாறு கால்வாய் திட்ட நீரை எந்த வர்த்தக பயன்பாட்டிற்கும் எடுக்கக்கூடாது. அப்படி எடுக்கப்பட்டால் அதை உடனடியாக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கால்வாயின் இருபுறத்திலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கக் கூடாது. ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்தால் அவற்றிற்கு உடனடியாக சீல் வைக்க வேண்டும். இந்த திட்டத்தை வகுக்கும்போதே, இரு மாநில அரசுகளும் இடைமலையாறு மற்றும் ஆனைமலையாறு ஆகியவற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்று திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேரள அரசின் ஒத்துழைப்புடன் அது விரைந்து கட்டப்படும் என்று இந்த நீதிமன்றம் நம்புகிறது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

The post கேரளா ஒத்துழைப்புடன் ஆனைமலை ஆற்றின் குறுக்கே அணை பரம்பிக்குளம்-ஆழியாறு கால்வாய் நீரை வர்த்தக ரீதியாக பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Parampikkulam ,Azhiyar ,Anaimalai River ,Kerala ,Chennai ,Tamil Nadu government ,Kerala government ,Dinakaran ,
× RELATED ஆழியாறு தடுப்பணையில் தடைமீறிய...