×

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு கரும்புடன் வந்த விவசாயியால் பரபரப்பு: கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ராகுல் தலைமையில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட முழுவதிலும் இருந்து ஏராளமான கரும்பு, நெல் விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் விவசாய துறையை சேர்ந்த அதிகாரிகள், மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அப்போது, செங்கல்பட்டு மாவட்டம் தண்டரை அடுத்த ஆதிகேசவபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்குபாணி என்பவர் தனது மனைவியுடன் கரும்பு கட்டுகளுடன் வந்தார். அப்போது கலெக்டரிடம் ஒரு புகார் மனு அளித்தார். பின்னர், அவர், ‘எனக்கு சொந்தமான நிலத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் கரும்பு நடவு செய்துள்ளேன்.

இதற்காக ஒரகடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் கடன் பெற்றிருந்தேன். கரும்பு பயிரிட்டு அறுவடைக்கு தயாரானது. அந்த நேரத்தில், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள், 2 ஏக்கர் மட்டுமே அறுவடை செய்தனர். மீதமுள்ள கரும்புகளை நாற்றுக்கு விட்டு விடுங்கள் என கூறிவிட்டு வெட்டிய 2 ஏக்கர் கரும்புகளை அதிகாரிகள் சந்திரசேகர், கந்தசாமி ஆகியோர் எடுத்து சென்றுள்ளனர். அதன் பிறகு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து அதிகாரி சந்திரசேகரிடம் கேட்டேன். என்னை மரியாதை குறைவாக பேசியதோடு, ‘கலெக்டரா கரும்பு வெட்ட போகிறார். நான்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டரிடம் சொன்னால் எல்லாம் முடிந்து விடுமா.. நாங்கள்தான் பார்க்க வேண்டும்’ என கூறியதோடு என்னை கடுமையாக பேசினார்.

மேலும், ‘எனது நிலத்தில் பயிரிட்டிருந்த கரும்பு போதிய வளர்ச்சி இல்லை, தண்ணீர் முறையாக பாய்ச்சவில்லை, முறையாக உரங்கள் இடவில்லை. இது சாகுபடிக்கு ஏற்றதல்ல’ என பொய்யான தகவலை வைத்து எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்துள்ளனர். அதோடு, கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனை அடைக்க சொல்லி அதிகாரி சந்திரசேகர் அழுத்தம் கொடுத்தார்’ என பரபரப்பு குற்றசாட்டை தெரிவித்தார். அதற்கு கலெக்டர், ‘சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதியளித்தார்.

மேலும் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான நெல் விதைகள், உரங்கள், பண்ணை கருவிகள், உழவு உபகரணங்கள், அறுவடை இயந்திரங்கள் சரிவர கிடைப்பதில்லை, அரசின் மூலம் வாடகை விடப்படும் இயந்திரங்கள் குறித்த நேரத்தில் வருவதில்லை, அதிகாரிகளின் மெத்தனத்தால் உண்மையான விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வாடகைக்கு கிடைப்பதில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை விவசாயிகள் சுமத்தினர். விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதியளித்தார்.

The post செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு கரும்புடன் வந்த விவசாயியால் பரபரப்பு: கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார் appeared first on Dinakaran.

Tags : Chengalbatu District Farmers Reduction Meeting ,Chengalpattu ,Chengalbatu district ,Collector ,Raqul ,Chengalpattu District Farmers Reduction Meeting ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...