×

வியத்தகு விஞ்ஞானிகள் : ஜெகதீஷ் சந்திர போஸ்

1858 நவ. 30 – 1937 நவ. 23

இந்தியாவின் முதல் அறிவுசார் சொத்துரிமைக்கான காப்புரிமை பெற்ற விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ். 1904ம் ஆண்டு, தனது ‘மின் குறுக்கீடுகளைக் கண்டறிதல்’ என்ற ஆய்வு முடிவை அமெரிக்காவில் பதிவு செய்து, அதற்கு காப்புரிமை (யுஎஸ்755840ஏ) பெற்றார் போஸ். இவர், தாவரங்களுக்கும் உயிருண்டு என்று, தான் கண்டறிந்த ‘கிரஸ்கோகிராப்’என்ற கருவியால் நிரூபித்தவரும் கூட. கொல்கத்தாவின் மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றிய போஸ், வளிமண்டலத்திலுள்ள மின்காந்த அலைகளின் நீளத்தைக் குறைத்தால் தகவல் தொடர்பில் பயன்படுத்த முடியும் என்று கண்டறிந்தவர்.

1894 நவம்பரில், அலைநீளம் குறுக்கப்பட்ட மின்காந்த அலைகளின் பயன்பாட்டை கொல்கத்தா நகர்மன்ற அரங்கில் துணைநிலை ஆளுநர் வில்லியம் மெக்கன்ஸி முன்னிலையில் நிரூபித்துக் காட்டினார் போஸ். வெடிமருந்தை எரியச் செய்து, அதன் தூண்டலால் குறைந்த அலைநீள மின்காந்த அலைகளைப் பயன்படுத்தி, எந்தத் தொடர்பு ஊடகமும் இன்றி தொலைவிலிருந்த மணியை இயங்கச் செய்தார் போஸ். அதற்கு அப்போது ‘கண்ணுக்குத் தெரியாத ஒளி’ என்று பெயரிட்ட போஸ், ‘இந்த ஒளி (மின்காந்த அலை) சுவர்களையும் கட்டடங்களையும் கூட ஊடுருவும். இதன் உதவியால் கம்பியில்லாத் தொலைதொடர்பு எதிர்காலத்தில் சாத்தியமாகும்’ என்றார். ஆனால், அதனை அவர் முறைப்படி பதிவு செய்யவில்லை.

ஆனால், இந்தத் தத்துவமே வானொலியின் (ரேடியோ) இயக்கத்துக்கு அடிப்படை. அதே ஆண்டில் வானொலியை இயக்கி அதற்கு காப்புரிமமும் பெற்ற இத்தாலியரான மார்க்கோனி அதற்கான பெரும் புகழை அடைந்தார்.இந்நிலையில் தான், ‘மின் குறுக்கீடுகளைக் கண்டறிதல்’ என்ற ஆராய்ச்சி முடிவை போஸ் 1901-இல் வெளியிட்டார். அப்போது போஸின் நலம் விரும்பிகளும், சாரா சாப்மன் புல் என்ற அமெரிக்க விஞ்ஞானியும் தொடர்ந்து வற்புறுத்தியதால், தனது ஆராய்ச்சி முடிவை உலக அளவிலான காப்புரிமை நிறுவனத்தில் பதிவு செய்து, 1904 மார்ச் 29-இல் காப்புரிமை பெற்றார் போஸ். அதுவே முதல் இந்திய காப்புரிமை என்ற சிறப்பைப் பெற்றது. இயற்பியல், உயிரியல், தாவரவியல், தொல்லியல், வங்க இலக்கியம் எனப் பல துறைகளில் முத்திரை பதித்திருக்கிறார் ஜெகதீஷ் சந்திர போஸ். கொல்கத்தாவில் 1917ல் இவர் நிறுவிய போஸ் ஆராய்ச்சிக் கழகம் இன்றும் பல விஞ்ஞானிகளை உருவாக்கி வருகிறது.

– சக்திவேல்

 

The post வியத்தகு விஞ்ஞானிகள் : ஜெகதீஷ் சந்திர போஸ் appeared first on Dinakaran.

Tags : Jekadish Chandra Bose ,Jekadesh ,India ,Jekadish Moon Bose ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!