×

2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கிடைக்குமா? : ஜூலை 21ல் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

புதுடெல்லி: இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல்காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு ஜூலை 21ம் தேதி விசாரணைக்கு வருகிறது. பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் கடந்த மார்ச் 23ம் தேதி இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து வயநாடு தொகுதி எம்பி பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஏப்ரல் 3ம் தேதி ராகுல் காந்தி சூரத் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த சூரத் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 20ம் தேதி ராகுல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து சூரத் கூடுதல் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும், தனக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை விதிக்க கோரியும் ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹேமந்த் பிரச்சாக் கடந்த 7ம் தேதி ராகுல் மனுவை தள்ளுபடி செய்தார். இந்தநிலையில் குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும், தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தியும் ராகுல்காந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வக்கீல் எஸ் பிரசன்னா சார்பில் இந்த அப்பீல் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில் ராகுல் காந்தி தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்கி, மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். மனுவை ஜூலை 21 அல்லது ஜூலை 25ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அபிஷேக் மனு சிங்கி நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். இந்த முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி, ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு ஜூலை 21ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.2 ஆண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தால், அவர் மீண்டும் எம்.பி. பதவியை பெற்றுக்கொள்ள முடியும்.

The post 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கிடைக்குமா? : ஜூலை 21ல் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை! appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Supreme Court ,New Delhi ,Rakulkandi ,Dinakaran ,
× RELATED “சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services)...