×

7 மணி நேர விசாரணைக்கு பிறகு வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடி..கைது இல்லை என அமலாக்கத்துறை விளக்கம்; மீண்டும் ஆஜராக சம்மன்!!

சென்னை : சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி இன்று
மாலை ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி உள்ளார். இவர், கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011 மே மாதம் வரை கனிமவளத்துறை அமைச்சராக பதவியில் இருந்தார்.அவரது பணிக்காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் அருகே பூத்துறை கிராமத்தில் அளவுக்கு மீறி செம்மண் வெட்டி எடுத்ததாக, அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு வேண்டுமென்றே செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்பட்டதாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணி எம்பி உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது. கடந்த 2011ம் ஆண்டு இறுதியில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது.

இந்நிலையில், கடந்த 11 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த வழக்கில், அதுவும் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போடப்பட்ட வழக்கில் வேண்டுமென்றே சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள வீடு, விழுப்புரம் புதுச்சேரி சாலை, கிழக்கு சண்முகபுரத்தில் உள்ள வீடு, பொன்முடி மகன் கவுதம் சிகாமணியின் வீடு, அவரது உதவியாளர்கள் வீடு, விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி மற்றும் பொறியியல் கல்லூரி, விழுப்புரம் ரங்கநாதன் வீதியில் அமைச்சருக்கு சொந்தமான கயல் பொன்னி நிறுவனம், சென்னை கே.கே.நகரில் உள்ள கவுதம் சிகாமணியின் உறவினர் நடத்தும் தனியார் மருத்துவமனை என 9 இடங்களில் நேற்று காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை ஒரே நேரத்தில், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக சென்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பொன்முடி உரிய விளக்கம் அளித்தார். பின்னர் இரவு 8 மணியளவில் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி ஆகியோரிடம் விடிய விடிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதிகாலை 3 மணிக்கு விசாரணை முடிந்த நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்திடம் இருந்து பொன்முடி தனது வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். மேலும் இன்று மாலை 4 மணிக்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்.பி.யுமான கௌதம சிகாமணி ஆகியோர் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதனிடையே சென்னையில் அமலாக்கத்துறை துணை இயக்குனர் கார்த்திக் தேசாரி செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில், அமைச்சர் கைது செய்யப்படவில்லை என்று உறுதி அளித்தார்.

The post 7 மணி நேர விசாரணைக்கு பிறகு வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடி..கைது இல்லை என அமலாக்கத்துறை விளக்கம்; மீண்டும் ஆஜராக சம்மன்!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,Samman ,Chennai ,Enforcement Department ,Ajar ,Nungambakkam Shastri Bhavan ,
× RELATED செய்தித்தாள்கள் வாசிப்பதை...