×

மணிமண்டபம் திறப்பு விழா அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்றியவர் தலித் எழில்மலை: தொல்.திருமாவளவன் பேச்சு

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம் இரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் தலித் எழில்மலை. முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சராக இருந்தவர். இவர் கடந்த 2020ம் ஆண்டு இயற்கை எய்தினார். அவரது உடல் அவரது சொந்த ஊரான இரும்பேட்டில் அடக்கம் செய்தநிலையில் அவரது நினைவை போற்றும் வகையில் அக்கிராமத்தில் அவரது உருவ சிலை மற்றும் நினைவு மணிமண்டபம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா இரும்பேடு கிராமத்தில் நேற்று நடந்தது. இவ்விழாவில் அவரது மகளும் விசிக துணை பொதுச்செயலாளருமான எழில்கரோலின் தலைமை தாங்கினார்.

விசிக எம்எல்ஏக்கள் சிந்தனைச்செல்வன், பாலாஜி மற்றும் பனையூர் மு.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ரத்னா எழில்மலை அனைவரையும் வரவேற்றார். விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எழில்மலை உருவ சிலை மற்றும் நினைவு மணிமண்டபத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார். பின்னர், திருமாவளவன் பேசுகையில், ‘தலித் எழில்மலை கடவுள் மறுப்பாளர்- பகுத்தறிவு சிந்தனை கொண்டவர். ஏழுமலை என்று இருந்த அவரது பெயரை எழில்மலை என மாற்றிக் கொண்டவர்.

அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்து வந்தவர். எஸ்சி, எஸ்டி தொழிலாளர்களுக்காக அம்பேத்கர் பேரவை ஏற்படுத்தி பெரியார் திடலில் மாபெரும் மாநாட்டை நடத்தி காட்டியவர். நீல நிற சட்டை அணிவதை வழக்கமாகக் கொண்டவர் தலித் மக்களுக்காக எண்ணற்ற போராட்டங்களை நடத்தினார். இந்துவை உணருகிறான் என்றால் சாதிய இந்துக்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் அடிமை சேவை செய்ய தயாராக இருக்கிறான் என்று பொருள். சாதி ஒழிய வேண்டும் என நம்மை போன்று யாரும் விரும்ப மாட்டார். அதிலும் சனாதன சக்திகள், ஆர்எஸ்எஸ், பாஜ விரும்பவேமாட்டார்கள்.

ஏனென்றால் சாதிகள் இருந்தால் மட்டுமே அவர்கள் ஆட்சியில் இருக்க முடியும். விழாவில் திமுக அமைப்பு செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்பி, தேசிய தலித்பெண்கள் இயக்கத்தின் தலைவர் ரூத் மனோரமா, எஸ்டிபிஐயின் பொதுச்செயலாளர் உமர் பாரூக், வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் பார்வேந்தன், மாவட்ட செயலாளர் சூ.க.ஆதவன், மண்டல செயலாளர் விடுதலைச் செழியன், ஒன்றிய நிர்வாகிகள் கதிர்வாணன், எடிசன், தயாநிதி, கிட்டு பிரபாகரன், முகிலன் கார்வேந்தன், புரட்சிமாறன், புகழேந்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post மணிமண்டபம் திறப்பு விழா அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்றியவர் தலித் எழில்மலை: தொல்.திருமாவளவன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Manimandapam ,Ambedkar ,Thirumavalavan ,Talit Chengalpadu ,District ,Irompede Village ,post ,Hour Opening Festival ,Talit Sailemalai ,Thirumavavan ,
× RELATED அம்பேத்கர் பிறந்த நாள் விழா